×
Saravana Stores

சென்னை மாநகர் போக்குவரத்து கழகம் சார்பில் நவீன வசதிகளுடன் கூடிய 500 தாழ்தள மின்சார பஸ்கள்: விரைவில் பயன்பாட்டிற்கு வருகிறது

சென்னை: சென்னை மாநகர் போக்குவரத்து கழகம் சார்பாக நவீன வசதிகளுடன் கூடிய 12 மீட்டர் நீளமுள்ள 500 தாழ்தள மின்சார பேருந்துகள், விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரும் என்று போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார். இதுகுறித்து போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்ட அறிக்கை: சென்னையில் பொதுமக்களின் போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்யும் விதமாகவும், நகரின் கார்பன் தடயத்தை கணிசமாக குறைக்கும் விதமாகவும், சுற்றுச்சூழல் நிலைத்தன்மை இலக்குகளை அடைவது, புகையில்லா மற்றும் மாசு இல்லாத பொது போக்குவரத்து சேவையை அளிக்கும் விதமாகவும், நவீன வசதிகளுடன் கூடிய 12 மீட்டர் நீளமுள்ள 500 தாழ்தள மின்சார பேருந்துகளை மொத்த விலை ஒப்பந்த மாதிரி முறையில் இயக்கிட முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இந்த ஒப்பந்தத்தில் ஓஎச்எம் குளோபல், எவி டிரான்ஸ், ஏரோ ஈகிள் ஆகிய 3 நிறுவனங்கள் கலந்து கொண்டன. தற்போது, மேற்படி ஒப்பந்தமானது முடிவுக்கு வந்து ஓஎச்எம் குளோபல் மொபலிட்டி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. மேற்கண்ட மின்சார பேருந்துகள் ஸ்விட்ச் மொபலிட்டி நிறுவனத்தின் மூலம் தயார் செய்து இயக்கப்பட உள்ளது. இந்த பேருந்துகள் ஏப்ரல் 2025 முதல் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரும். நவீன வசதிகளுடன் கூடிய 12 மீட்டர் நீளமுள்ள தாழ்தள மின்சார பேருந்துகள் ஒரு முறை மின்னேற்றம் செய்தால் சராசரியாக 180 கி.மீ. இயக்க இயலும். நாளொன்றுக்கு சராசரியாக 200 கி.மீ. வரை இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குளிர்சாதன வசதியில்லாத 400 மின்சார பேருந்துகளும், குளிர்சாதன வசதியுடன் கூடிய 100 மின்சார பேருந்துகள் என மொத்தம் 500 மின்சார பேருந்துகள் பெரும்பாக்கம், தண்டையார்பேட்டை-1, பூந்தமல்லி, வியாசர்பாடி மற்றும் பெரம்பூர்-2 ஆகிய 5 பணிமனைகளிலிருந்து இயக்கப்பட உத்தேசிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த மின்சார பேருந்துகள் இயக்கத்தால் பொதுமக்களுக்கு உலகத் தரம் வாய்ந்த சேவையை வழங்கிட வழிவகை செய்யும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post சென்னை மாநகர் போக்குவரத்து கழகம் சார்பில் நவீன வசதிகளுடன் கூடிய 500 தாழ்தள மின்சார பஸ்கள்: விரைவில் பயன்பாட்டிற்கு வருகிறது appeared first on Dinakaran.

Tags : Chennai Municipal Transport Corporation ,Chennai ,Transport Minister ,Sivasankar ,Minister ,Transport ,Dinakaran ,
× RELATED சென்னை மாநகர் போக்குவரத்துக்...