×
Saravana Stores

வளசரவாக்கத்தில் ஆக்கிரமிப்பில் இருந்த 3 ஏக்கர் அரசு நிலம் மீட்பு: திமுக கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு

சென்னை: வளசரவாக்கம் எஸ்.வி.எஸ்.நகரில் ஆக்கிரமிப்பில் இருந்த 3 ஏக்கர் நிலம், திமுக கவுன்சிலர் நடவடிக்கையால் நிலம் மீட்டெடுக்கப்பட்டது. இந்த நிலத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார். வளசரவாக்கம் மண்டலம், 151வது வார்டுக்கு உட்பட்ட எஸ்.வி.எஸ். நகரில் வளசரவாக்கம் ஏரி ஒன்று இருந்தது. இந்த ஏரியை தனியார் ஆக்கிரமித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. தனியார் ஆக்கிரமிப்பில் உள்ள இந்த ஏரியின் நீர்பிடிப்பு பகுதியானது, மழை காலங்களில் அப்பகுதி மக்களுக்கு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வந்தது.

இதையடுத்து, ஆக்கிரமிப்பில் உள்ள இந்த நிலத்தை மீட்டெடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அதன்படி, சென்னை மாநகராட்சி 151வது வார்டு கவுன்சிலரும், சென்னை தெற்கு மாவட்ட திமுக மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளருமான சங்கர் கணேஷ் அந்த பகுதியில் ஆய்வு செய்தார். அப்போது, வளசரவாக்கம், எஸ்.வி.எஸ். நகரில் அரசுக்கு சொந்தமான புல எண்கள். 206, 210, 211-ல் அடங்கிய குளம், ஏரி, ஏரி உள்வாய், கசம் வகைப்பாட்டில் சுமார் 3 ஏக்கர் நிலத்தை தனியார் ஆக்கிரமிப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, அரசுக்கு சொந்தமான இந்த நிலத்தை மீட்க திமுக கவுன்சிலர் சங்கர் கணேஷ் நடவடிக்கை எடுத்து அந்த நிலத்தை மீட்டெடுத்தார். அதை தொடர்ந்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின் படி ஏரியை தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. இதனை, அமைச்சர் மா.சுப்பிரமணியன், மதுரவாயல் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் காரம்பாக்கம் க.கணபதி ஆகியோர் நேற்று ஆய்வு மேற்கொண்டு, ஆக்கிரமிப்பை அகற்ற உதவிய கவுன்சிலருக்கு பாராட்டு தெரிவித்தனர். நிகழ்வில் மண்டல குழுத் தலைவர் நொளம்பூர் ராஜன், அரசுத் துறை அதிகாரிகள் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

The post வளசரவாக்கத்தில் ஆக்கிரமிப்பில் இருந்த 3 ஏக்கர் அரசு நிலம் மீட்பு: திமுக கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Dimuka Councillor ,Chennai ,Valasaravakkam ,S. V. ,Dimuka ,Minister ,Ma. Subramanian ,151st Ward ,S. V. S. ,
× RELATED வீட்டிற்கு வர வேண்டாம் என கூறியதால்...