×
Saravana Stores

குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலையில் நெரிசல் ராதா நகர் சுரங்கப்பாதை தடுப்புகளை 3 நாளில் மாற்றி அமைக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு எம்எல்ஏ உத்தரவு

தாம்பரம்: குரோம்பேட்டை ராதா நகர் சுரங்கப்பாதை பணிக்கு அமைக்கப்பட்டுள்ள தடுப்புகளை 3 நாளில் மாற்றி அமைத்து, ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண வேண்டும் என அதிகாரிகளுக்கு எம்எல்ஏ இ.கருணாநிதி உத்தரவிட்டுள்ளார். குரோம்பேட்டை பகுதியில் ஜிஎஸ்டி சாலையில் இருந்து ராதா நகர் பகுதிக்கு பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் எளிதாக சென்று வரும் வகையில் சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. சுரங்கப்பாதையின் பெரும்பாலான பணிகள் முடிவடைந்த நிலையில் ஜிஎஸ்டி சாலை பகுதியில் இறுதிக்கட்ட பணிகள் வருகிறது.

இந்த பணிகளுக்காக ஜிஎஸ்டி சாலையில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளதால் தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில் தீபாவளி பண்டிகை வர இருப்பதால் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் சார்பில் பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதியிடம் கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையை ஏற்று நேற்று மாலை பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி தலைமையில், மண்டல குழு தலைவர் இ.ஜோசப் அண்ணாதுரை, ரயில்வே, நெடுஞ்சாலை, போக்குவரத்து துறைகளை சேர்ந்த அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலையில், ராதா நகர் சுரங்கப்பாதை பணிகள் நடைபெறும் பகுதியில் சாலையில் உள்ள தடுப்புகளை ஒன்றரை மீட்டர் உள்ளே நகர்த்தி அமைத்து போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வண்ணம் மூன்று நாட்களுக்குள் நடவடிக்கை எடுத்து பணிகளை முடிக்க வேண்டும் என அதிகாரிகளிடம் எம்எல்ஏ இ.கருணாநிதி கேட்டுக்கொண்டார். இதற்கு உடனடியாக பணிகளை தொடங்கி அவற்றை சரி செய்து போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

The post குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலையில் நெரிசல் ராதா நகர் சுரங்கப்பாதை தடுப்புகளை 3 நாளில் மாற்றி அமைக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு எம்எல்ஏ உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Chromepet ,Nagar ,MLA ,Tambaram ,E. Karunanidhi ,Chromepet Radha Nagar ,GST ,Radha ,Crompettai ,Crompettai GST ,Radha Nagar ,Dinakaran ,
× RELATED வீட்டிற்கு வர வேண்டாம் என கூறியதால்...