சேலம்: திருவனந்தபுரம்-கோரக்பூர் எக்ஸ்பிரசில், முன்பதிவு பெட்டிகளை கும்பலாக ஆக்கிரமித்த வட மாநில தொழிலாளர்கள் 300 பேரை, சேலம் ரயில்வே ஸ்டேஷனில் டிக்கெட் பரிசோதகர்கள், போலீசார் இறக்கி விட்டனர். தமிழ்நாடு, கேரளாவில் வட மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள், ஆயிரக்கணக்கில் தங்கியிருந்து பல்வேறு வேலைகளை பார்த்து வருகின்றனர். புலம் பெயர்ந்த தொழிலாளர்களான இவர்கள், மிக அதிகளவு கட்டுமான தொழிலில் ஈடுபடுகின்றனர். ஜவுளி ஏற்றுமதி நிறுவனங்கள், தறிக்கூடங்கள், வெள்ளிப்பட்டறைகள், செங்கல்சூளைகள் போன்றவற்றிலும் பணியாற்றுகின்றனர். தமிழ்நாட்டில் தங்கியிருக்கும் வட மாநில தொழிலாளர்கள், பண்டிகை காலங்களில் தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் செல்கின்றனர். வரும் 8ம் தேதி ஹோலி பண்டிகையை கொண்டாடுவதற்காக, இங்கு பணியாற்றும் வட மாநில தொழிலாளர்கள், ரயில்களில் புறப்பட்டுச் செல்கின்றனர். கும்பலாக பயணிக்கும் இவர்கள், முன்பதிவில்லா டிக்கெட் எடுத்துக் கொண்டும், டிக்கெட் எடுக்காமலும் முன்பதிவு பெட்டிகளை ஆக்கிரமித்து செல்வதால், முறையாக டிக்கெட் புக்கிங் செய்து பயணிக்கும் பயணிகளுக்கு பெரும் தொந்தரவு ஏற்பட்டு வருகிறது.
இதனால், கேரளா மற்றும் தமிழ்நாட்டில் இருந்து வட மாநிலங்களுக்கு செல்லும் ரயில்களில், ஆர்பிஎப் மற்றும் தமிழ்நாடு ரயில்வே போலீசார், தீவிர கண்காணிப்பை மேற்கொண்டுள்ளனர். இருப்பினும் ஹோலி பண்டிகையையொட்டி, கடந்த சில நாட்களாக வட மாநிலங்கள் செல்லும் அனைத்து ரயில்களிலும் கூட்டம் அதிகளவு உள்ளது. நேற்று முன்தினம், சேலம் வழியே சென்ற திருவனந்தபுரம்-கோரக்பூர் ரயிலில், முன்பதிவு பெட்டிகளை ஆக்கிரமித்து வட மாநில தொழிலாளர்கள் கும்பலாக பயணித்தனர். சேலம் ரயில்வே ஸ்டேஷனுக்கு மாலை 6.16 மணிக்கு அந்த ரயில் வந்தது. பின்னர், 3 நிமிடத்தில் புறப்பட்ட போது, எஸ்-4 பெட்டியில் பயணித்த பயணிகள், அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தினர். இதனால், அந்த பெட்டிக்கு தலைமை டிக்கெட் பரிசோதகர் ராஜசேகர் மற்றும் ஆர்பிஎப் போலீசார், தமிழ்நாடு ரயில்வே போலீசார் சென்று விசாரித்தனர். அங்கு பெட்டி முழுவதும் வட மாநில தொழிலாளர்கள் நிரம்பி வழிந்தனர்.
முறையாக டிக்கெட் முன்பதிவு செய்திருந்த பயணிகள், நிற்க கூட இடமில்லாமல் நின்றிருந்தனர். அனைத்து இருக்கைகளையும் டிக்கெட் இல்லாமலும், முன்பதிவில்லா டிக்கெட் வைத்துக் கொண்டும் வட மாநில தொழிலாளர்கள் ஆக்கிரமித்திருந்தனர். இதனால் முன்பதிவு செய்த பயணிகள், டிக்கெட் இல்லாத அனைவரையும் வெளியேற்றி, தங்களது பயணத்திற்கு இடையூறு இல்லாமல் பார்த்துக் கொள்ளும்படி புகார் தெரிவித்தனர். இதையடுத்து, அனைத்து முன்பதிவு பெட்டிகளிலும் டிக்கெட் பரிசோதகர்கள் குழுவினர் மற்றும் ரயில்வே இன்ஸ்பெக்டர் சிவசெந்தில்குமார் தலைமையிலான போலீசார், ஆர்பிஎப் உதவி எஸ்ஐ சாமுவேல் தலைமையிலான போலீசார் சோதனை நடத்தி, டிக்கெட் இன்றி முன்பதிவு பெட்டிகளை ஆக்கிரமித்த வடமாநில தொழிலாளர்கள் 300 பேரை இறக்கி விட்டனர். பிறகு அந்த ரயில் மாலை 6.45 மணிக்கு புறப்பட்டுச் சென்றது. கீழே இறக்கி விடப்பட்ட வட மாநில தொழிலாளர்கள், அடுத்தடுத்து வந்த ஜோலார்பேட்டை ரயில், சென்னை ரயில்களில் ஏறிச் செல்ல ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டது. இச்சம்பவம் சேலம் ரயில்வே ஸ்டேஷனில் பரபரப்பை ஏற்படுத்தியது.
