×

நாகர்கோவிலில் நடந்த கண்காட்சியில் 95 வகையான சிறு தானிய உணவு வகைகள் சமைத்து அசத்திய மாணவிகள்-கலெக்டர் பாராட்டு

நாகர்கோவில் :  நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நேற்று (3ம்தேதி)  பசுமை சங்கம நிகழ்ச்சி மற்றும்  உணவு திருவிழா தொடங்கியது. இந்த கண்காட்சியை கலெக்டர் ஸ்ரீதர்  தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கல்லூரி மாணவிகள் பாரம்பரிய உணவுப் பொருட்களைக் கொண்டு பல்வேறு வகையான உணவுகளை தயாரித்து அதை கண்காட்சியாக வைத்திருந்தனர்.  குறிப்பாக சிறுதானிய உணவு வகைகள் என்ற தலைப்பில் ராகி கேக், ராகி அல்வா, ராகி பீட்சா, தினை பாயாசம், ராகி பிஸ்கட், சிறுதானிய சப்பாத்தி,  உளுந்தம் பால், கருப்புக் கவனி, பால் கொழுக்கட்டை, கார கொழுக்கட்டை, உளுந்தங்களி,  வரகு பாயாசம்,  சிறு தானிய பாயாசம்,  வரகு லட்டு, கம்பு நெய் லட்டு, சாம லட்டு,  தினை லட்டு  கிழங்கு வகைகள் உள்பட 95 வகையான பாரம்பரிய சிறு தானிய உணவு வகைகளை தயாரித்து காட்சிப்படுத்தி  இருந்தனர்.

இவை தவிர கேழ்வரகு கூழ், கம்பங் கூழ் போன்றவைகளும் கண்காட்சியில் இடம் பெற்று இருந்தது. இவைகளை ஏராளமானவர்கள் பார்வையிட்டு சென்றனர்.  கல்லூரியில் உள்ள பல்வேறு துறைகளை சேர்ந்த மாணவிகளே இந்த தானிய உணவு வகைகளை வைத்திருந்தனர். இதன் செயல்முறை விளக்கத்தையும்  இடம் பெற செய்திருந்தனர். இது மட்டுமல்லாமல் பல்வேறு வகையான வாழைத்தார்கள் கண்காட்சியில் இடம் பெற்று இருந்தன. செவ்வாழை, ஏத்தன், ரசக்கதலி உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட வாழைத்தார்கள் இருந்தன. இவை அனைத்து இயற்கை விவசாய அடிப்படையில் விளைந்தவை ஆகும்.

 தோவாளை பூக்களின்  காட்சி, நெல் ரகங்களின் கண்காட்சி, மீன் சார்ந்த கடல் உணவுகள்  போன்றவைகளும் இடம் பெற்று இருந்தன. வீடுகளை அலங்கரிக்கும் நெல் தோரணம், பனை பொருட்களால் தயாரிக்கப்பட்ட உணவு பதார்த்தங்கள் மற்றும் பனை ஓலைகளால் செய்யப்பட்ட கூடை வகைகள், தொப்பிகள், முறம் ஆகியவையும் இருந்தன. இவற்றை கண்காட்சிக்கு வந்தவர்கள் மற்றும் மாணவிகள் வியப்புடன் பார்வையிட்டனர். குறிப்பாக முறத்தை வாங்கி எப்படி பயன்படுத்த வேண்டும் என மாணவிகள் சிலர் கேட்டதும், வியப்பாக இருந்தது.

இந்த கண்காட்சி மற்றும் உணவு திருவிழா இன்று 2 வது நாளாகவும் நடக்கிறது. தொடக்க நிகழ்ச்சியில் எழுமின் (தி ரைஸ்) நிறுவனர் ம.ஜெகத் கஸ்பார், எழுமின் குமரி  மாவட்ட  இயக்குநர் ஜோஸ் மைக்கேல் ராபின், குமரி பசுமை சங்கம செயலாளர் சுகதேவ்,  கல்லூரி முதல்வர் சகாய செல்வி, கல்லூரி செயலர் கில்டா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக கண்காட்சியல் நடந்த உணவு திருவிழாவில் மாணவிகள் சார்பில் வைக்கப்பட்டு இருந்த சிறு தானிய உணவு வகைகளை பார்வையிட்டு, கலெக்டர் பாராட்டினார். அரசு நிகழ்ச்சியிலும் சிறுதானிய உணவு வகைகள் தான் இருக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளதாக கலெக்டர் ஸ்ரீதர் கூறினார்.

நீர், நிலத்தை பாதுகாக்க வேண்டும்

முன்னதாக கலெக்டர் ஸ்ரீதர் பேசுகையில்,  குமரி மாவட்டத்தை பசுமை மாவட்டமாக மாற்றும் நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம்  மேற்கொண்டு வருகிறது. இதற்கு முதல் நடவடிக்கையாக கால்வாய், குளங்கள், ஆறுகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குமரி மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து வீடுகள், அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் அமைக்க வேண்டும்.

குமரி மாவட்டத்தில் மட்டும் தான் வடகிழக்கு மற்றும் தென்மேற்கு என இரு பருவமழை காலங்களில் மழை பெய்கிறது.  மழைநீரை அதிகளவில் சேகரிக்க முன்வர வேண்டும். இதற்கு அடுத்த படியாக நிலத்தை மாசுப்படுத்தும் பிளாஸ்டிக்கை ஒழிக்க வேண்டும். திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ்  வீடுகளில் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளை தனியாக பிரித்து தூய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும். வீடுகள், வணிக நிறுவனங்கள்  மின்னணு கழிவுகளும் தனியாக சேரிக்கப்படுகின்றன. ஒவ்வொரு சனிக்கிழமை அன்று மின்னணு கழிவுகள் சேகரிப்பு முகாம் நடக்கிறது. குமரி  மாவட்டத்தை முழுமையான பசுமை மாவட்டமாக மாற்றுவதற்கு மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.



Tags : Nagercoil , Nagercoil : A Green Sangam program and food festival started yesterday (3rd) at a private college in Nagercoil. This
× RELATED கமல்ஹாசனின் பெயர், புகைப்படங்களை...