திண்டுக்கல்: சிறுமலை வனப்பகுதியில் பரவிய காட்டுத்தீயால், பல ஏக்கர் நிலத்தில் இருந்த மூலிகை செடிகள், மரங்கள் கருகின. தீயை கட்டுப்படுத்த வனத்துறையினர் போராடி வருகின்றனர். திண்டுக்கல் அருகே சிறுமலையில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் அடர்ந்த வனப்பகுதி உள்ளது. இதில் காட்டுமாடுகள், கடமான், காட்டுப்பன்றி, குரங்குகள் உள்ளிட்ட பல்வேறு வகையிலான விலங்குகள் மற்றும் ஏராளமான பறவைகள் காணப்படுகின்றன. கடந்த சில நாட்களாக வனப்பகுதியில் அடிக்கடி தீ விபத்து ஏற்பட்டு வந்தது. நேற்று பகல் ஒரு மணி அளவில் சிறுமலை அகஸ்தியர்புரம் பகுதியில் இருந்து தென்மலை செல்லும் வழியில் உள்ள வனப்பகுதியில் திடீரென தீப்பற்றியது.
அப்போது காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீ மளமளவென பல்வேறு இடங்களுக்கும் பரவியது. இதனால் வனப்பகுதியில் பல ஏக்கர் நிலங்களில் இருந்த மூலிகை செடிகள், மரங்கள் தீயில் கருகி நாசமாயின. வனத்துறை ஊழியர்கள் தீயை அணைக்க கடுமையாக போராடி வருகின்றனர். திண்டுக்கல் தீயணைப்பு படையினரும் அங்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தீ விபத்து குறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, ‘‘சிறுமலை வனப்பகுதி தற்போது சுற்றுலா தலமாக மாறி வருகிறது. இங்கு வரும் சுற்றுலாப்பயணிகளில் சிலர் காட்டுப்பகுதியில் எளிதில் தீப்பிடிக்கும் பொருட்களை வீசிச் செல்கின்றனர். அதன் காரணமாக அப்பகுதியில் தீப்பற்றுகிறது. சிறுமலைக்கு வரும் வாகனங்களை வனத்துறையினர் சோதனை செய்த பின்னரே அனுமதிக்கின்றனர். ஆனாலும் இதுபோன்ற தீ விபத்துகள் தொடர்கிறது. தற்போது ஏற்பட்டுள்ள காட்டுத்தீயை கட்டுப்படுத்த அதிகாரிகள் விரைவான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’’ என்றனர்.