*திறமையை வெளிப்படுத்திய கல்லூரி மாணவர்கள்
திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் முதலமைச்சர் கோப்பைக்கான கிரிக்கெட், பளு தூக்கும் போட்டிகள் நடைபெற்றது. இதில், கல்லூரி மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்று திறமையை வெளிப்படுத்தினர். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் கடந்த 11ம் தேதி தொடங்கி தொடர்ந்து நடந்து வருகிறது.
அதில் தடகளம், செஸ், கைப்பந்து, இறகு பந்து, கபடி உள்ளிட்ட 5 பிரிவுகளாக போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இணையத்தில் பதிவு செய்த நபர்கள் மட்டுமே போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படுகின்றனர். அரசு ஊழியர்களுக்கு தடகளம், கைப்பந்து, இறகுப்பந்து, கபடி, செஸ் உள்ளிட்ட போட்டிகள், மாற்றுத்திறனாளிகளுக்கு விளையாட்டு போட்டிகள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், வட்டு எறிதல், குண்டு எறிதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடந்துள்ளன.
அதை தொடர்ந்து, பள்ளி மாணவ-மாணவிகளுக்கான பளு தூக்குதல் மற்றும் டென்னிஸ் விளையாட்டு போட்டிகள் நேற்று முன்தினம் நடந்தது. அதன் தொடர்ச்சியாக கல்லூரி மாணவ-மாணவிகளுக்கான பளு தூக்குதல் மற்றும் டென்னிஸ் போட்டி நேற்று நடந்தது. அதில், திருவண்ணாமலை அரசு கலை கல்லூரி உள்பட மாவட்டத்தின் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
அதேபோல் முதலமைச்சர் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி நேற்று திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடந்தது. கிரிக்கெட் போட்டிைய திருவண்ணாமலை மாவட்ட சீனியர் தடகள சங்க தலைவர் கார்த்திவேல்மாறன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அலுவலர் பாலமுருகன், மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
