வாலாஜாபாத்: வாலாஜாபாத் அருகே 400 ஆண்டுகள் பழமையான காளி சிலையை வாலாஜாபாத் வட்டார ஆய்வு மையத்தினர் கண்டு பிடித்துள்ளனர். இதனையறிந்த அப்பகுதி மக்கள் சிலையை வணங்கி செல்கின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியம் தேவரியம்பாக்கம் ஊராட்சியில் கொசப்பட்டு என்ற கிராமம் உள்ளது. இங்கு, வாலாஜாபாத் வட்டார ஆய்வு மையத்தின் சார்பில், சிலை ஒன்று கொசப்பட்டு விளைநிலங்களின் மத்தியில் புற்று மணலால் சூழப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
1923ம் ஆண்டு தொல்லியல் துறையினரின் ஆய்வுப்படி (85/1923) கல்தலை என்ற வயல்வெளியின் தெற்கு பகுதியில் இருந்த ஒரு பாறையில் விஜயநகர நாயக்க மன்னர் காலத்தை சேர்ந்த நில தானத்தை பற்றிய தமிழ் எழுத்து கல்வெட்டு இருந்ததாக கூறப்படுகிறது. அக்கல்வெட்டை கண்டுபிடிக்கும் பணியில் வாஜாலாபாத் வட்டார வாலாற்று ஆய்வு மையத்தினர் ஈடுபட்டனர். அப்போது, அக்கல்வெட்டு கண்டு பிடிக்க முடியவில்லை. ஆனால், அங்கு காளி சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வாலாஜாபாத் வட்டார வரலாற்று ஆய்வு மையத்தின் தலைவர் அஜய்குமார் கூறியதாவது: 16ம் நூற்றாண்டை சேர்ந்த 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த காளி தேவியின் சிலை. தலையில் கிரிட மகுடமும், தலைக்கு பின்னால் நெருப்பு ஜூவாலைகளும், காதுகளில் குண்டலம், பெருத்த கண்கள், தோள் வளை, கழுத்தில் ஆபரணம், மார்பு கச்சை, இடுப்புக்கு கீழ் ஆடை, கால்களில் சிலம்புடன் இடது கால் மடக்கி அமர்ந்த நிலையில் இச்சிலை உள்ளது.
மேலும், இன்று குக்கிராமமாக உள்ள கொசப்பட்டு முற்காலத்தில் செழிப்பாக வரலாற்று பாரம்பரியத்தோடு இருந்துள்ளது. மன்னர் காலங்களில் இருந்து பல கிராமங்களில் பரம்பரையாக கணக்கெழுதும் பணியை இக்கிராமத்தில் வாழ்ந்தவர்கள் செய்துள்ள தகவலும் தெரியவருகிறது. இப்பகுதி மக்கள் இச்சிலையை ஆயிரம்மன் என்ற பெயரில் வணங்கி வந்ததாக குறிப்பிடுகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார். மேலும், வாலாஜாபாத் வட்டார ஆய்வு மைய தலைவர் அஜய்குமார் காளி சிலை ஒன்று கண்டுபிடித்துள்ளதா, உதவி தொல்லியல் ஆய்வாளர் ரமேஷ் தகவல் தெரிவித்தார். பின்னர், அங்கு வந்த ராமேஷ், உதவி கல்வெட்டு ஆய்வாளர் நாகராஜன் மற்றும் பிரசன்னா ஆகியோர், இது 16ம் நூற்றாண்டின் பிற்பகுதி காலத்தை சேர்ந்ததாக இருக்க வாய்ப்புள்ளது என கூறினர். இதனிடையே, இத்தகவலை அறிந்த கொசப்பட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் காளி சிலையினை வணங்கி செல்வது குறிப்பிடத்தக்கது.
