×

செங்கம் அரசு பெண்கள் பள்ளி அருகே விபத்துகளை தவிர்க்க சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும்

*பொதுமக்கள் கோரிக்கை

செங்கம் : செங்கம் அரசு பெண்கள் பள்ளி அருகே விபத்துகளை தவிர்க்க வேகத்தடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.செங்கம் நகரில், பெருமாள் கோயில் தெருவில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் சுமார் 1,500 மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளி அருகே அடிக்கடி விபத்துகள் நடந்து வந்ததால், பள்ளி பகுதி மெதுவாக செல்ல வேண்டும் என எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டு உள்ளது. ஆனாலும், இந்த சாலையில் அதிவேகமாக செல்லும் வாகனங்களால் விபத்துகள் ஏற்பட்டு வருகிறது.

அதேபோல், இந்த சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்படும் நிலை உள்ளது. அது மட்டுமின்றி இந்த சாலை வழியாக 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் நாள்தோறும் சென்று வருகின்றனர். இதனால், காலை மற்றும் மாலை நேரங்களில் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

எனவே, பள்ளி அருகே ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டு சாலையில் இருபுறமும் வேகத்தடை அமைத்தால் வாகனங்களின் வேகம் கட்டுப்பாட்டுக்குள் வரும். மேலும், விபத்து ஏற்படாமல் போக்குவரத்து நெரிசலும் சரி செய்யப்படும். ஆனால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் வேதனை தெரிவிக்கின்றனர்.எனவே, பள்ளி மாணவிகளின் நலன் கருதியும், விபத்துகளை தவிர்க்கவும் வேகத்தடையை அமைக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Tags : Sengam Government Girls School , Sengam: People have demanded that a speed limit should be set up near Sengam Government Girls School to avoid accidents.
× RELATED சென்னை முழுவதும் சீரான குடிநீர்...