×

அதானி விவகாரத்தில் போர்ப்ஸ் அறிக்கை ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு

புதுடெல்லி: அதானி விவகாரத்தில் போர்ப்ஸ் இதழ் வெளியிட்ட அறிக்கையை பதிவு செய்யக் கோரிய மனுதாரரின் பரிந்துரையை உச்ச நீதிமன்றம் ஏற்க மறுத்தது. பங்குச்சந்தையில் அதானி குழுமம் மோசடி செய்தது தொடர்பான குற்றச்சாட்டு குறித்து 4 பொது நல மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த விவகாரத்தில் இந்திய முதலீட்டாளர்களின் நலனை பாதுகாக்க வேண்டுமென வலியுறுத்திய உச்ச நீதிமன்றம், ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் நிபுணர் குழுவை அமைக்க ஒன்றிய அரசுக்கு பரிந்துரைத்தது. இந்த நிபுணர் குழு குறித்த விவகாரங்களை ஒன்றிய அரசு சீலிடப்பட்ட கவரில் தருவதாக தெரிவித்த கோரிக்கையை உச்ச நீதிமன்றம் கடந்த 17ம் தேதி மறுத்தது.

இந்த விவகாரத்தில் முழு வெளிப்படைத்தன்மையை பராமரிக்க விரும்புவதாக கூறியது. இந்நிலையில், தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வில் நேற்று ஆஜரான மனுதாரர்களில் ஒருவர், ‘‘போர்ப்ஸ் இதழில் கவுதம் அதானியின் மூத்த சகோதரர் வினோத் அதானி ரஷ்ய வங்கியில் மோசடி செய்தது தொடர்பாக அறிக்கை வெளியாகி உள்ளது. இதையும் நீதிமன்றம் பதிவு செய்ய வேண்டும்’’ என கோரிக்கை விடுத்தார். அதற்கு தலைமை நீதிபதி மறுத்து விட்டார். ‘‘அதை நாங்கள் பதிவு செய்ய மாட்டோம்’’ என மனுதாரரின் பரிந்துரையை நிராகரித்தார்.

* 50 பில்லியன் டாலராக சொத்து மதிப்பு சரிந்தது
அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் நிறுவனம் ஆய்வறிக்கை வெளியிடும் முன்பாக, அதானியின் சொத்து மதிப்பு 123 பில்லியன் அமெரிக்க டாலராக (ரூ.10.08 லட்சம் கோடி) இருந்த நிலையில், ஒரே மாதத்தில் 49.1 பில்லியன் டாலராக (ரூ.4 லட்சம் கோடி) சரிந்துள்ளது. இதனால், உலக பணக்காரர்கள் பட்டியலில் 3ம் இடத்தில் இருந்த அதானி 25வது இடத்திற்கு கீழிறங்கி உள்ளார். அவரது சொத்து மதிப்பு பல ஆண்டுக்குப் பின் முதல் முறையாக 50 பில்லியன் டாலருக்கு குறைவாக சரிந்துள்ளது.


Tags : Supreme Court ,Forbes ,Adani , Supreme Court refuses to accept Forbes report on Adani case
× RELATED அமலாக்கத்துறையின் கடும்...