தாராபுரம்: அமராவதி ஆற்றில் பொதுமக்களை அச்சுறுத்தி வரும் முதலையை பிடிக்க வனத்துறையினர் வலை விரித்தும், அதில் சிக்காமல் 3 நாட்களாக போக்குகாட்டி வருகிறது. திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அமராவதி ஆற்றில் அகஸ்தீஸ்வரர் கோயில் அருகே ஆழமான பகுதியில் சுமார் 12 அடி நீளம் உள்ள ராட்சத முதலை தென்பட்டது. இந்த முதலை கடந்த 15 நாட்களாக அப்பகுதி பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. இதுகுறித்து தாராபுரம் நகராட்சி நிர்வாகம் சார்பில் நகர்மன்ற தலைவர் பாப்பு கண்ணன், ஆணையாளர் ராமர் ஆகியோர் மாவட்ட வனத்துறை அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.
இதையடுத்து முதலையை பிடிக்க கடந்த 3 நாட்களாக அமராவதி ஆற்றுப்பகுதியில் காங்கயம் வனச்சரகர் தனராஜ் தலைமையில் 10 பேர் அடங்கிய குழுவினர் முகாமிட்டுள்ளனர். தொடர்ந்து, தேடுதல் வேட்டை நடத்தி வந்த நிலையில் நேற்று முன்தினம், ஆற்றில் விரித்து வைக்கப்பட்டிருந்த வலையில் சிக்கிய முதலை, அதனை அறுத்து கொண்டு தப்பியது. இதனால் தேடுதல் பணி தொய்வடைந்தது. இதைதொடர்ந்து, நேற்று காலை 10 மணி முதல் மீண்டும் வனத்துறையினர் தேடுதல் வேட்டையில் இறங்கினர்.
காலை 6 மணி முதல் 8.30 மணி வரை அமராவதி பழைய பாலம் அகஸ்தீஸ்வரர் கோயில் அருகே தண்ணீருக்குள் தலையை நீட்டி முதலை படுத்திருந்தது. அதற்கு பின்னர் மின்னல் வேகத்தில் தலைமறைவானது. இதனால் ஆற்றின் கரையோரம் முதலையை எதிர்பார்த்து மாலை வரை காத்திருந்த வனத்துறையினர் முதலையின் இருப்பிடம் தெரியாமல் திணறினர். இந்நிலையில் ஆற்றில் அதிக தண்ணீர் வரத்தும் தண்ணீர் நிரம்பியும் இருந்ததால் முதலையை வலை வீசி பிடிப்பதில் நேற்றும் 3 வது நாளாக இழுபறி நீடித்தது.
