×

சிவகாசி ஊராட்சி ஒன்றிய கிராமங்களில் தெருக்களின் நடுவே உள்ள மின்கம்பங்களை மாற்ற வேண்டும்

*மின்வாரியம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

சிவகாசி : சிவகாசி ஊராட்சி ஒன்றிய கிராமங்களில் தெருக்களின் நடுவே போக்குவரத்துக்கு இடையூரான மின்கம்பங்களை மாற்றி அமைக்க, மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.விருதுநகர் மாவட்டம், சிவகாசி பகுதியில் 200க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. சிவகாசி மாநகராட்சியில் உள்ள திருத்தங்கல் மண்டலத்தில் 24 வார்டுகளில் 200க்கும் மேற்பட்ட தெருக்கள் அமைந்துள்ளன.

இந்த பகுதிகளில் உள்ள ஏராளமான தெருக்களில் மின்கம்பங்கள் மையப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஆனையூர் ஊராட்சியில் காந்தி நகர், பாரைப்பட்டி, முத்துராமலிங்கம் நகர், சிவானந்தம் நகர் உட்பட பல்வேறு பகுதிகளில் சாலைகளின் நடுவே மின்கம்பங்கள் ஊன்றப்பட்டுள்ளன. விஸ்வநத்தம் ஊராட்சியில் அண்ணாமலை ரெட்டியார் நகரில், இரண்டு சாலைகளிலும் விநாயகர் காலனியில் ஒரு சாலையின் நடுவிலும் மின்கம்பங்கள் உள்ளன.

அனுப்பன்குளம் ஊராட்சியில் மீனம்பட்டி வடக்கூர், ஆண்டியாபுரம் சாலை, காளியம்மன்கோவில் தெரு, அயயம்மாள் மேட்ச் காலனி ஆகிய பகுதிகளிலும் சாலைகளின் நடுவே மின்கம்பங்கள் உள்ளன.

திருத்தங்கல் மண்டலம்:

சிவகாசி மாநகராட்சி திருத்தங்கல் மண்டலத்தில் திருவள்ளுவர் காலனி, ராதாகிருஷ்ணன் காலனி, முருகன் காலனி ஆகிய பகுதிகளிலும் சாலை நடுவே மின்கம்பங்கள் உள்ளன. 7வது வார்டில் அம்மன் மேட்ச் பின்புறம் உள்ள தெருக்களில் 2 மின்கம்பங்கள் சாலை நடுவே உள்ளன. சாலைகளின் நடுவில் மின்கம்பங்கள் உள்ளதால் அவசர தேவைக்கு வாகனங்கள் அவ்வழியாக செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. அத்துடன் ஆம்புலன்ஸ் வாகனங்கள், குடிநீர் வாகனங்கள் தெருவிற்குள் செல்ல முடியாத நிலை உள்ளது.

இந்த சாலைகளில் வசிக்கும் பொதுமக்கள் கனரக வாகனங்களை வெகு தூரத்தில் நிறுத்திவிட்டுதான் வீட்டிற்கு செல்ல முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.மின்கம்பங்கள் சாலைகளின் நடுவில் உள்ளதால் குப்பைகள் சேகரிக்கும் வாகனங்கள் இந்த சாலையை தவிர்க்கின்றன. எனவே, கிராமங்களில் சாலைகளின் நடுவே உள்ள மின் கம்பங்களை அகற்றி, சாலையோரங்களில் ஊன்ற மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

ஊராட்சி மன்ற தலைவர் ஒருவர் கூறுகையில், ‘சாலையின் நடுவில் உள்ள மின்கம்பங்களை மாற்றி அமைக்க ஊராட்சியில் இருந்துதான் பணம் கட்ட வேண்டியுள்ளது. எனவே, மின்வாரியமே மின்கம்பங்களை சாலையோரங்களில் வைக்க நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இந்த பிரச்னைக்கு தீர்வு ஏற்படும்’ என்று கூறினார்.

சேதமடைந்த மின்கம்பங்கள்

திருத்தங்கல் மண்டலத்தில் ஸ்டேட் பாங்க் காலனியில் 4 மின் கம்பங்கள் மிகவும் சேதமடைந்து காணப்படுகின்றன. செல்லியம்மன் கோயில் தெரு பகுதியில் உள்ள மின்கம்பம், சித்துராஜபுரம் ரோடு தனியார் பார் அருகில் உள்ள மின்கம்பம், வடபட்டியில் மேலூர் செல்லும் வழியில் உள்ள மின்கம்பம் உட்பட பல்வேறு பகுதிகளில் மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளன. எனவே, சேதமடைந்துள்ள மின்கம்பங்களையும் போர்க்கால அடிப்படையில் மாற்றி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

குறைந்த மின்அழுத்தத்தால் பாதிப்பு

சிவகாசி அருகே விஸ்வநத்தம் ஊராட்சியில் பல்வேறு பகுதிகளில் வீடுகளில், ‘லோ வோல்டேஜ்’ எனப்படும், குறைந்த மின்னழுத்த பிரச்னையால், மின்சாதனங்களை இயக்க முடியாமல், பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். குறிப்பாக கவிதா நகர், சுப்ரீம் நகர், சின்னத்தம்பி நகர் ஆகிய பகுதிகளில் குறைந்த மின்னழுத்த பிரச்னை ஏற்படுகிறது.மின்னழுத்த பிரச்னையால், மின்சாதனங்கள் பழுதாவதுடன், மின்கட்டணமும் அதிகம் செலுத்த கூடிய நிலை உருவாகியுள்ளது. இந்த பகுதிகளில் கூடுதல் டிரான்ஸ்பார்மர்கள் அமைக்க வேண்டும் என்று கிராம மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

தாழ்வாக செல்லும் உயரழுத்த மின் கம்பிகள்

சிவகாசியில் பல்வேறு கிராமப் பகுதிகளில் பல இடங்களில் உயர்மின்அழுத்த கம்பிகள், ஒயர்கள், தாழ்வாக செல்வதுடன், மின்கம்பங்கள் சரிந்து விழும் நிலையில் உள்ளன.குறிப்பாக பள்ளப்பட்டி ஊராட்சியில் மீரா காலனி, திருமேனி நகர் பகுதிகளில் மின்வயர்கள் தாழ்வாக செல்வதால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்கின்றனர்.இந்த பகுதிகளில் சரக்கு வாகனங்கள் செல்லும்போது மின்கம்பிகள் மீது உரசி விபத்து ஏற்படுகிறது. இதை தவிர்க்க, மின்வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

மேலும், ஆனையூர் ஊராட்சியில் தேவர் சிலையில் இருந்து சுமார் 300 மீட்டர் தூரம் மின் வயர்கள், மின்கம்பங்கள் மாற்றி அமைக்கப்படாதால் அந்தப்பகுதியில் 50க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு மின் இணைப்பு கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இதனையும் மின்வாரிய அதிகாரிகள் கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Tags : Sivakasi Panchayat Union , Sivakasi: To replace the electric poles obstructing the traffic in the villages of Sivakasi panchayat union, the power board
× RELATED செங்கல்பட்டு – காஞ்சிபுரம்- அரக்கோணம்...