×

மகளிர் டி.20 உலக கோப்பை; 97 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி: இன்று மாலை இந்தியா-பாகிஸ்தான் மோதல்

பார்ல்:10 அணிகள் பங்கேற்றுள்ள 8வது மகளிர் டி.20 உலக கோப்பை தொடர் தென்ஆப்ரிக்காவில் நடந்து வருகிறது. இதில் 10 அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் போட்டிகளில் விளையாடி வருகின்றன. நேற்றிரவு பார்ல் நகரில் நடந்த 3வது போட்டியில், ஏ பிரிவில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா-நியூசிலாந்து அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 173 ரன் அடித்தது. அதிகபட்சமாக அலிசா ஹீலி 55, கேப்டன் மெக் லானிங் 41, எல்லிஸ் பெர்ரி 40 ரன் அடித்தனர். பின்னர் களம் இறங்கிய நியூசிலாந்து 14 ஓவரில் 76 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. இதனால் 97 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அபார வெற்றிபெற்றது. ஆஸி. பவுலிங்கில் ஆஷ்லே கார்ட்னர் 3 ஓவரில் 12 ரன் கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தி ஆட்டநாயகி விருதுபெற்றார்.

முன்னதாக பி பிரிவில் நடந்த மற்றொரு போட்டியில் வெ.இண்டீஸ்-இங்கிலாந்து அணிகள் மோதின. முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 135 ரன் எடுத்தது. பின்னர் ஆடிய இங்கிலாந்து 14.3 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 138 ரன் எடுத்து அபார வெற்றி பெற்றது.

கேப்டவுனில் இன்று மாலை 6.30 மணிக்கு பி பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா, பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. கேப்டன் ஹர்மான் பிரீத் கவுர் தலைமையிலான அணியில் தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா ஆகியோர் காயத்தில் இருந்து குணமடையாததால் இன்றைய ஆட்டத்தில் களமிறங்குவது சந்தேகம்தான். பேட்டிங்கில் ஷபாலி வர்மா, ரிச்சா கோஷ் ஆகியோர் மீது எதிர்பார்ப்பு உள்ளது. பந்துவீச்சில் ரேணுகா சிங், ஷிகா பாண்டே, பூஜா வஸ்த்ரகர் பலம் சேர்க்கக்கூடும். பாகிஸ்தான் அணியை பொறுத்தவரையில் நிடா தார் கவனிக்கத்தக்க வீராங்கனையாக இருப்பார்.

டி.20 கிரிக்கெட் வரலாற்றில் இதற்கு முன் அணிகளும் 13 முறை மோதி உள்ளன.இதில் 10போட்டிகளில் இந்தியா வென்றுள்ளது. பாகிஸ்தான் 3போட்டிகளில் வென்றுள்ளது. ஒரு போட்டி டையில் முடிந்துள்ளது. டி.20 உலக கோப்பையில் 6 போட்டிகளில் மோதி உள்ளதில் 4ல் இந்தியாவும், 2ல் பாகிஸ்தானும் வென்றுள்ளன. இரவு 10.30 மணிக்கு நடக்கும் மற்றொரு லீக் ஆட்டத்தில் ஏ பிரிவில் இலங்கை-வங்கதேசம்அணிகள் மோதுகின்றன.



Tags : Women's T20 World Cup ,Australia ,India ,Pakistan , Women's T20 World Cup; Australia win by 97 runs: India-Pakistan clash tonight
× RELATED கிரிக்கெட் போட்டிகளில் இருந்து அலிஷா ஹீலி ஓய்வு