* ஆஸி ஓபன் தகுதி சுற்றில் ஜோர்செஸ்கா அசத்தல்
மெல்போர்ன்: ஆஸ்திரேலியன் ஓபன் மகளிர் பிரிவு தகுதிச் சுற்றுப் போட்டியில் நேற்று, ஆஸ்திரிய வீராங்கனை சிஞ்சா கிராஸ் – மாசிடோனியா வீராங்கனை லினா ஜோர்செஸ்கா மோதினர். முதல் செட்டில் இரு வீராங்கனைகளும் சிறப்பாக ஆடி புள்ளிகளை எடுத்தனர். முடிவில், 7-5 என்ற புள்ளிக் கணக்கில் லினா வென்றார். தொடர்ந்து நடந்த 2வது செட்டில் அட்டகாசமாக ஆடிய லினா, ஒரு புள்ளி கூட எடுக்க விடாமல் 6-0 என்ற புள்ளிக் கணக்கில் அந்த செட்டை வசப்படுத்தினார். அதனால், 2-0 என்ற நேர் செட் கணக்கில் லினா வெற்றி வாகை சூடினார்.
* வாஷிங்டன் சுந்தர் காயத்தால் விலகல்
வதோதரா: இந்தியா – நியூசிலாந்து அணிகள் இடையே நேற்று முன்தினம் வதோதராவில் நடந்த போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. அப்போட்டியில் ஆடிய இந்திய அணியின் ஆல் ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் காயமடைந்ததால், தொடரின் மீதமுள்ள போட்டிகளில் ஆடமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதில் ஆயுஷ் படோனி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அணி நிர்வாகிகளை கலந்தாலோசித்த பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்தன. சுந்தர் குணமாக இன்னும் இரு வாரங்களாவது ஆகும் எனத் தெரிகிறது.
* இன்டர்மிலன்-நேபோலி போட்டி டிரா
மிலன்: சீரி ஏ கால்பந்து போட்டியில் நேற்று இன்டர் மிலன் – நேபோலி அணிகள் மோதின. பரபரப்பாக நடந்த இப்போட்டியின் துவக்கம் முதல் இரு அணிகளும் கோல் போடுவதில் முனைப்பு காட்டினர். போட்டி துவங்கி 9வது நிமிடத்தில் இன்டர் மிலன் அணியின் பெடெரிகோ டிமார்கோ முதல் கோல் போட்டு அசத்தினார். அதே அணியின் ஹகான் சல்ஹனோக்லு 73வது நிமிடத்தில் மேலும் ஒரு கோல் போட்டார். இருப்பினும், நேபோலி அணியின் ஸ்காட் மெக் டாமினே 26 மற்றும் 81வது நிமிடங்களில் 2 கோல் போட்டு ஆட்டத்தை டிராவில் முடித்தார். இந்த போட்டியில் இன்டர் மிலன் அணி 43 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது.
