×

ஸ்பானிஷ் கோப்பை கால்பந்து திக்… திக்… திரில்லரில் வென்று திகைக்க வைத்த பார்சிலோனா: சாம்பியனாகி அசத்தல்

ஜெட்டா: ஸ்பானிஷ் சூப்பர் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில் பார்சிலோனா அணி அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் கிங் அப்துல்லா ஸ்டேடியத்தில் ஸ்பானிஷ் சூப்பர் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டி நேற்று நடந்தது. இப்போட்டியில் பலம் வாய்ந்த பார்சிலோனா – ரியல் மாட்ரிட் அணிகள் மோதின.

இரு அணிகளும் துவக்கம் முதல் ஆக்ரோஷமாக மோதி கோல் போடுவதில் முனைப்பு காட்டினர். போட்டியின் 36வது நிமிடத்தில் பார்சிலோனா அணியின் முன்னணி வீரர் ராபினா தனது அணிக்காக முதல் கோல் போட்டு கணக்கை துவக்கி வைத்தார். முதல் பாதி முடியும் தருணத்தில் ரியல் மாட்ரிட் அணியின் நட்சத்திர வீரர் வினிஷியஸ் ஜூனியர் 45+2வது நிமிடத்தில் துரிதமாக முதல் கோல் போட்டு அசத்தினார்.

அதை ஈடுகட்டும் வகையில் பார்சிலோனா அணியின் ராபர்ட் லெவாண்டோஸ்கி 45+4வது நிமிடத்தில் கோல் போட, அவரைத் தொடர்ந்து அடுத்த இரு நிமிடங்களில் ரியல் மாட்ரிட் அணியின் கோன்ஸலோ கார்சியா தனது அணியின் 2வது கோல் போட்டு போட்டியை சமநிலைக்கு கொண்டு வந்தார். அதனால் போட்டியில் யார் வெற்றி பெறுவார் என தொியாமல் ரசிகர்கள் கைகளை பிசைந்த வண்ணம் போட்டியை ரசித்து பார்த்துக் கொண்டிருந்தனர். இரு அணி வீரர்கள் முட்டி மோதியும் கோல் விழவில்லை.

இருப்பினும் போட்டி முடியும் தருவாயில் 73வது நிமிடத்தில் பார்சிலோனா அணியின் ராபினா மேலும் ஒரு கோல் போட்டு அணியை முன்னிலைப் படுத்தினார். அதன் பின்னர் கோல்கள் விழாததால், பார்சிலோனா அணி 3-2 என்ற கோல் கணக்கில் அட்டகாசமாக வென்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. போட்டியின் கடைசி நேரத்தில் 90+1வது நிமிடத்தில் முரட்டுத்தனமாக நடந்து கொண்ட பார்சிலோனா அணியின் பிரென்கி டி ஜாங்கிற்கு நடுவர் ரெட் கார்ட் காட்டி வெளியேற்றியது குறிப்பிடத்தக்கது.

Tags : Spanish Cup football ,Barcelona ,Jeddah ,Spanish Super Cup football ,King Abdullah Stadium ,Jeddah, Saudi Arabia ,
× RELATED நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள்...