×

நீதிபதி விக்டோரியா கவுரி வழக்கு; அரசியல் சாசன தீர்ப்பின் அடிப்படையில் உத்தரவு பிறப்பிப்பு: வழக்கை முடித்து வைத்தது உச்சநீதிமன்றம்..!

டெல்லி: நீதிபதி விக்டோரியா கவுரி வழக்கில் அரசியல் சாசன தீர்ப்பின் அடிப்படையில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம், இவ்வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக விக்டோரியா கவுரி, கடந்த சில நாட்களுக்கு முன் அறிவிக்கப்பட்டார். இவர் குறிப்பிட்ட மதத்தினருக்கு எதிராக வெறுப்பை ஏற்படுத்தும் வகையில் பேசிய வீடியோ ஆதாரத்தை சுட்டிக்காட்டி, அவரை நீதிபதியாக நியமிக்க எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் இருவர் வழக்கு தொடர்ந்தனர்.

மேலும், இந்த வழக்கை அவசர வழக்காகக் கருதி விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது. மனுதாரர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொள்வதாக அறிவித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், இரண்டு நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் இந்த வழக்கை விசாரிக்கும் என கூறி இருந்தார். அதன்படி, இந்த வழக்கு நீதிபதி சஞ்சீவ் கண்ணா, பி.ஆர்.கவாய் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், விக்டோரியா கவுரிக்கு எதிரான மனுக்களை தள்ளுபடி செய்து இடைக்கால தீர்ப்பு வழங்கினர்.

இதையடுத்து, திட்டமிட்டபடி விக்டோரியா கவுரி நேற்று முன்தினம் கூடுதல் நீதிபதியாக பதவியேற்றுக்கொண்டார். உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதேபோல், மேலும் 4 பேர் கூடுதல் நீதிபதிகளாக பதவியேற்றுக் கொண்டனர். இந்நிலையில் விக்டோரியா கவுரி தொடர்பான வழக்கின் இறுதி தீர்ப்பை இன்று உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கண்ணா பிறப்பித்தார். அதில், ‘நீதிபதிகள் நியமனம் தொடர்பாக அரசியல் சாசன தீர்ப்பின் அடிப்படையில் ஆய்வு செய்தே பின்னரே இறுதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

விக்டோரியா கவுரி நியமனம் தொடர்பாக கொலீஜியம் குழு பரிந்துரை செய்தது சரியே; மற்றபடி அவர் எவ்வாறு நியமனம் செய்யப்பட்டார் என்ற கேள்விக்குள் நாங்கள் செல்லவில்லை. அவர் பொருத்தமானவரா? என்ற கேள்விகளுக்குள் செல்ல நாங்கள் விரும்பவில்லை’ என்று இறுதி தீர்ப்பை வெளியிட்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.

Tags : Judge ,Victoria Gouri ,Supreme Court , Justice Victoria Gowrie's case; Issuance of orders based on the constitutional verdict: Supreme Court closed the case..!
× RELATED திறமையானவர்களுக்கு பதவி...