×

விருந்தோம்பல் திட்டத்தின் கீழ் சுற்றுலா தலங்களில் மேம்பாட்டுப்பணி: கனிமொழி எம்.பி. கேள்விக்கு ஒன்றிய அமைச்சர் பதில்

சென்னை: திமுக துணைத் தலைவருமான கனிமொழி  எம்பி, மக்களவையில் சுற்றுலாத் துறை தொடர்பான கேள்விகளை நேற்று எழுத்துப்பூர்வமாகக் கேட்டிருந்தார். தமிழ்நாட்டில்  சுற்றுச்சூழல் சுற்றுலா வளர்ச்சிக்காக அடையாளம் காணப்பட்ட தலங்கள் எவை?  அவற்றுக்கு அரசாங்கத்தால் வழங்கப்பட்ட நிதி உதவி விவரங்கள் என்ன? உள்ளிட்ட கேள்விகளை கேட்டிருந்தார். இதற்கு சுற்றுலா துறை அமைச்சர் ஜி. கிஷன் ரெட்டி அளித்த பதில்:  ஒன்றிய சுற்றுலாத் துறை சென்னை-மாமல்லபுரம்-ராமேஸ்வரம்-மணப்பாடு- கன்னியாகுமரி  ஆகிய பகுதிகளில்  கடலோர சுற்று வட்டார சுற்றுலா மேம்பாட்டுக்காக, ஸ்வதேஷ் தர்ஷன் திட்டத்தின் கீழ்,  ரூ.69.48 கோடியில் பணிகள்  நிறைவேற்றப்பட்டது.

மேலும் ஒன்றிய சுற்றுலா அமைச்சகம், ஆன்மிகம், பாரம்பரியத்தை மேம்படுத்தும் புனித யாத்திரை தலங்களுக்கான தேசிய திட்டத்தின் கீழ்  தமிழ்நாட்டில் இரு திட்டப் பணிகளுக்கு ஒப்புதல் அளித்தது.  காஞ்சிபுரம் சுற்றுலா மேம்பாட்டுக்காக  2016-17ல் ரூ.13.99 கோடி அனுமதிக்கப்பட்டு முழு தொகையும் விடுவிக்கப்பட்டது. அதே காலகட்டத்தில் வேளாங்கண்ணி சுற்றுலா மேம்பாட்டுக்காக ரூ.4.86 கோடி ஒப்புதல் அளிக்கப்பட்டு  முழு தொகையும் விடுவிக்கப்பட்டது. இப்போது தமிழ்நாட்டில் சுற்றுச் சூழல் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் தனியார் நிறுவனங்களை ஊக்குவிக்கும் திட்டம் எதுவும் இல்லை. அதேநேரம் ஒன்றிய அரசின் சுற்றுலாத் துறை உள்நாட்டு சுற்றுலா தலங்களை மேம்படுத்துதல், விருந்தோம்பல்’ திட்டத்தின் கீழ் பல்வேறு சுற்றுலா தலங்களை மேம்படுத்தி வருகிறோம். இவற்றில் சுற்றுச் சூழல் சுற்றுலா தொடர்பான தலங்களும் அடங்கும். இவ்வாறு சுற்றுலா அமைச்சர் ஜி.கிஷன் ரெட்டி கூறினார்.


Tags : Lingua M. GP ,Union ,Minister , Tourist Place, Development Works, Kanimozhi MP. Question, Union Minister, Answer
× RELATED ஆப்ஸ் மூலம் மளிகை பொருட்கள் சப்ளை;...