×

பாஜ பட்டியலின பிரிவு பொதுச்செயலாளர் விநாயகமூர்த்தி திமுகவில் இணைந்தார்

சென்னை: பாஜ பட்டியலின பிரிவு பொதுச் செயலாளர் விநாயகமூர்த்தி, அக்கட்சியில் இருந்து விலகி முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். பாஜ பட்டியலின பிரிவு மாநில பொதுச் செயலாளராக பதவி வகித்து வந்தவர் என்.விநாயகமூர்த்தி. இவர் சமீபத்தில் பாஜ கட்சியில் இருந்து விலகினார். இந்நிலையில், அவர் நேற்று அண்ணா அறிவாலயம் வந்தார். திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.  அவரது தலைமையில், ஈரோடு மாவட்ட பாஜ இளைஞர் அணிச் செயலாளர் வி.வெங்கடேஷ், மதுரை வீரன் மக்கள் இளைஞர் அணிச் செயலாளர் பழ.வீரக்குமார் உள்ளிட்ட பலர் பாஜவிலிருந்து விலகி திமுகவில் இணைந்தனர். இந்நிகழ்ச்சியின் போது, திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், துணைப் பொதுச்செயலாளர் க.பொன்முடி, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தித் தொடர்புத் தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், மின்சாரத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோவை கே.செல்வராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

திமுகவில் இணைந்தது குறித்து என்.விநாயகமூர்த்தி ெவளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நான் பாஜ கட்சியின் பட்டியலின பிரிவு மாநிலப் பொதுச்செயலாளராக பணியாற்றி வருகிறேன். தற்போது, தமிழகத்தையும்  தமிழக மக்களையும் காப்பாற்றுகிற தலைவராக முதல்வர் மு.க.ஸ்டாலின் பணியாற்றி வருகிறார். அவர் தலைமையின் கீழ் பணியாற்றவும், கலைஞர் முதல்வராக இருந்த போது, அருந்ததியர் சமுதாய மக்களுக்கு 3.5 சதவிகித இடஒதுக்கீடு 2009ல் வழங்கியதால், எங்கள் சமூகத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் உயர் கல்வி பயின்று வருகிறார்கள்.

அத்துடன், அரசுப் பணியிலும் பணியாற்றி வருகிறார்கள். ஈரோடு கிழக்கு தொகுதியில், எங்கள் சமுதாயத்தைச் சேர்ந்த சுமார் 35 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் வாக்காளர்களாக உள்ளனர். இவர்கள் அத்தனை பேரையும், நடைபெற உள்ள இடைத் தேர்தலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆசி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ். இளங்கோவனுக்கு கை சின்னத்தில் வாக்களிப்பார்கள். இத்தொகுதி முழுவதும் முழு வீச்சுடன், தீவிர களப்பணியாற்றி மாபெரும் வெற்றியை பெற வைத்து, திமுக தலைவர் கரத்தில் ஒப்படைப்பேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Tags : Baja Listed Division ,General Secretary ,Vinayakamurthi , Joined DMK as general secretary, BJP-led wing
× RELATED அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல்கள்: எடப்பாடி வேண்டுகோள்