×

வெளியூர் செல்பவர்களின் நலனுக்காக சென்னையில் ‘பூட்டப்பட்ட வீடுகள்’ புதிய திட்டம் விரைவில் அறிமுகம்: காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தகவல்

சென்னை: சென்னையில் பொதுமக்களிடம் இருந்து  திருடப்பட்ட பொருட்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வு எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நேற்று நடந்தது. இதில் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கலந்துகொண்டு திருடியவர்களிடமிருந்து  மீட்கப்பட்ட பொருட்களை உரியவர்களிடம் ஒப்படைத்தார். பின்னர், சென்னை காவல் ஆணையர்  சங்கர் ஜிவால் கூறியதாவது: சென்னையில் கடந்த ஆண்டு  வீடு புகுந்து திருட்டு, கொள்ளை, வழிப்பறி, சங்கிலி பறிப்பு, செல்போன் திருட்டு மற்றும் வாகன திருட்டு உள்பட சொத்து சம்பந்தப்பட்ட குற்ற வழக்குகளில் சென்னை காவல் துறையினர்  திறம்பட செயல்பட்டுள்ளனர். அந்தவகையில், சென்னையில் மொத்தம் சுமார் ரூ.19 கோடியே 29 லட்சம் மதிப்புள்ள 6,643.3 சவரன் (53.2 கிலோ) தங்க நகைகள், ரூ.2,70,87,939 ரொக்கம், 1,487 செல்போன்கள், 425 இரு சக்கர வாகனங்கள், 31 ஆட்டோக்கள் மற்றும் 18 இலகுரக வாகனங்கள் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த பொருட்கள் பொதுமக்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

சென்னையில் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை “drive against crime offenders) என்ற திட்டத்தின் மூலம் சிறப்பு சோதனை செய்யப்பட்டு நடவடிக்கைகள்  எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த 2022ம் ஆண்டு சென்னையில் திருட்டு, ஆதாய கொலை, வழிப்பறி, சங்கிலி பறிப்பு, வாகன திருட்டு உள்பட சொத்து தொடர்புடைய குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட 117 குற்றவாளிகள் உள்பட மொத்தம் 495 குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சென்னையில் ரோந்து பணியை தீவிரப்படுத்துவதற்காக ஸ்மார்ட் காவலர் செயலி ஒன்று சென்னை காவல் துறையின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல், பூட்டப்பட்ட வீடுகள் என்ற மற்றுமொரு புதிய திட்டம் சென்னை காவல் துறை மூலம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதனை ‘இ-பீட்’ திட்டத்துடன் இணைத்துள்ளோம். இதற்காக, தேசிய குற்ற ஆவண காப்பகத்துடன் பேசி வருகிறோம்.

இத்திட்டத்தின்படி, வீட்டை பூட்டிவிட்டு வெளியூர்களுக்கு செல்பவர்கள், தங்கள் பயணம், வீடு தொடர்பான தகவலை அருகில் உள்ள காவல் நிலையத்தில் தெரிவித்துவிட்டு செல்லலாம். மேலும், பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள இணையதளத்தில் பதிவு செய்துவிட்டால், அது தொடர்பான தகவல் சம்பந்தப்பட்ட இரவு ரோந்து போலீசாருக்கு சென்றுவிடும். இதையடுத்து ரோந்து போலீசார் தினமும் 3 முறை அந்த வீட்டை சோதனை செய்து கண்காணிப்பில் ஈடுபடுவார்கள். இந்த திட்டத்தை ஒரு மாதத்துக்குள் நடைமுறைக்கு கொண்டு வர முயற்சியை மேற்கொண்டு வருகிறோம்.

வரும் காலத்தில் குற்றச்சம்பவங்களை கட்டுப்படுத்த மேலும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த முயன்று வருகிறோம். ஆன்லைன் சைபர் குற்றங்கள் 100 சதவீதம் அதிகரித்து வருகிறது. 90 சதவீத வழக்குகள் பொதுமக்கள் அலட்சியத்தால் தான் வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் கூடுதல் காவல் ஆணையர்கள் டி.எஸ்.அன்பு, பிரேம் ஆனந்த் சின்கா, அனைத்து இணை ஆணையர்கள், அனைத்து துணை ஆணையர்கள், காவல் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags : Chennai ,Police Commissioner ,Shankar Jiwal , New scheme of 'locked houses' to be introduced in Chennai soon for the benefit of out-of-towners: Police Commissioner Shankar Jiwal
× RELATED தேர்தல் பணிகளில் சிறப்பாக பணியாற்றிய...