×

முத்துப்பேட்டை ரயில் நிலையத்தில் அடிப்படை வசதியின்றி பயணிகள் தவிப்பு: தரமின்றி கட்டப்பட்டதால் வீணாகி வரும் கட்டிடங்கள்

முத்துப்பேட்டை: முத்துப்பேட்டை ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் இன்றி பயணிகள் தவித்து வருகின்றனர். திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை ரயில்வே நிலையம் நூறு ஆண்டை கடந்த பழமை வாய்ந்ததாகும். ஆங்கிலேயர் ஆட்சியில் உருவாக்கப்பட்ட இந்த ரயில்வே நிலையம் மூலம் இப்பகுதியில் உள்ள உலக புகழ்பெற்ற தர்கா மற்றும் பிரசித்திப்பெற்ற தில்லை ராமர் கோயில் உள்ளிட்ட கோயில்கள் உட்பட பல்வேறு வழிப்பாட்டு தளங்கள், லகூன் மற்றும் அலையாத்திகாடுகள் உட்பட சுற்றுலா தளங்களால் ஒரு காலத்தில் ரயில்வே துறைக்கு அதிக லாபத்தை பெற்று தந்த ஒரு பகுதியாகும்.

இந்தநிலையில் 10 வருடங்களுக்கு முன் அகல ரயில் பாதை பணிக்காக இப்பகுதிக்கு வந்த ரயில்கள் நிறுத்தப்பட்டது. அதனைதொடர்ந்து பணிகள் துவங்கி முழுவீச்சில் நடைபெற்று முடிந்து சமீபத்தில் காரைக்குடி-திருவாரூர் பாசஞ்சர் ரயில் இயங்கி வருகிறது. விரைவில் இப்பகுதியில் பல்வேறு ரயில் சேவை தொடர உள்ளது. இந்நிலையில் இங்கு ரயில் நிலையம் உருவாகி இருந்த காலத்திலிருந்து “பி” கிரேடாக இருந்த முத்துப்பேட்டை ரயில்வே நிலையத்தை தற்பொழுது தரம் குறைத்து `டி’ கிரேடாக தென்னக ரயில்வே துறை மாற்றி உள்ளது. இதன் மூலம் இப்பகுதிக்கு வரும் ரயில்கள் 2நிமிடங்கள் மட்டுமே நின்று செல்லும் வகையிலும் மேலும் ஸ்டேஷன் மாஸ்டர் இல்லாத ஒரு ரயில்வே நிலையமாக செயல்படுகிறது.

தொலைதூரத்தில் வரும் ரயில்கள் இங்கு நின்று செல்வதில்லை. இதனால் இப்பகுதி மக்களுக்கும் வியாபாரிகளுக்கும் சுற்றுலா பயணிகளுக்கும் தொலை தூர பயணம் மேற்கொள்ள பல்வேறு இடர்பாடுகள் ஏற்பட்டுள்ளது. மேலும், பயணிகளுக்கு எந்தவிதமான வசதிகள் பெறவும் வாய்ப்புகள் இல்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த முத்துப்பேட்டை பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். ஆனாலும் தென்னக ரயில்வே அதிகாரிகள் எந்தவிதமான நடவடிக்கையும் இதுநாள்வரை எடுக்கவில்லை. இதனால் இப்பகுதி மக்களும் வியாபாரிகளும் கடும் அதிருப்தியுடன் உள்ளனர்.

இந்த பிரச்னை ஒரு புறம் இருக்க அகல ரயில் பாதை அமைக்கும் போது நெடுவெங்கும் ரயில் வழித்தடம் அருகேயிருந்த ரயில்வே ஸ்டேசன்களும் தற்போது புதுப்பிக்கப்பட்டு பயனுக்கு வந்துள்ளன. இந்தநிலையில் இந்த முத்துப்பேட்டை ரயில் நிலையத்தை ஸ்டேஷன் மாஸ்டருடன் இயங்கும் வகையிலும் கட்டிடத்துடன் பிளாட்பாரமும் அமைத்தும், ரயில் கிராசிங் அளவிற்கு இடத்தையும் அமைத்து என பல கோடி செலவழித்து பார்க்க மிளிர செய்த ரயில்வே நிர்வாகம், பல பணிகளை அப்படியே பாதியில் விட்டுள்ளது. இதில் ரயில்நிலையம் முகப்பு கட்டிடம் முழுமை பெறாமல் விடப்பட்டுள்ளதால் கட்டிடம் பொழிவு இழந்து வருகிறது.

அதேபோல் ரயில்நிலையம் முன் அமைக்கப்பட்ட ரவுண்டானா மற்றும் அதன் மேல் பகுதியில் அமைக்க இருந்த மினி பூங்கா பணியும் அப்படியே விடுபட்டுள்ளது. அதேபோல் இங்கு வரும் பயணிகள் பயன்படுத்தும் வகையில் எந்தவொரு அடிப்படை வசதியையும் செய்து கொடுக்க வில்லை. இதனால் இப்பகுதியில் ரயில் நிலையம் இருந்தும் இல்லாத நிலையில் உள்ளது. இதில் குடிநீர் வசதி கழிப்பறை வசதி இருந்தும் இல்லாத நிலையில் உள்ளது. அதேபோல் ரயில் நிலையம் பக்கவாட்டில் சுற்றிலும் கட்டப்பட்ட தடுப்பு சுவர்கள் போதிய தரமில்லாமல் கட்டப்பட்டுள்ளதால் பல இடங்களில் சுவர்கள் விரிசல் ஏற்பட்டு என்றைக்கு யார் தலையில் விழுமோ என்ற அச்சத்தில் உள்ளது.

ரயில் நிலையம் வளாகம் முழுமைக்கும் கருவை காடுகள் மண்டி கிடக்கிறது. அதேபோல் சுற்றுபகுதியில் உள்ள ரயில்வேக்கு சொந்தமான இடத்தில் அசுத்தமாக மழைநீர் தேங்கி டெங்கு கொசு உற்பத்தியை ஏற்ப்படுத்தும் நிலையில் உள்ளது. இப்படி மொத்தத்தில் இந்த ரயில் நிலையம் எந்தவொரு அடிப்படை வசதிகளும் இல்லாமல் உள்ளதால் பயணிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இதில் ரயில் பயணிகளை விட குடிமகன்கள், சமூக விரோதிகளுக்கு மிகவும் பயனளிக்கும் வகையில் இந்த ரயில் நிலையம் உள்ளது. இரவில் குடிமகன்கள் பாராக பயன்படுத்தி வருவதுடன் அதன் இருக்கைகளை அவர்கள் வசதிக்கு மாற்றி அமைத்து சுதந்திரமாக மது அருந்தி வருகின்றனர்.

அதனால் ஆங்காங்கே மது பாட்டிகள் சிதறி கிடக்கிறது. அதேபோல் இரவில் இப்பகுதி இருண்டு கிடப்பதால் சமூக விரோதிகளுக்கு மிகவும் வசதியாக உள்ளது. சிலர் சட்டவிரோதமாக மதுவும் விற்பனை செய்தும் வருகின்றனர். இதனால் இப்பகுதியை இரவு நேரத்தில் கடந்து செல்ல மக்கள் அச்சப்படுகின்றனர். அதேபோல் ஆடு மாடுகள் நாய்கள் உட்பட கால்நடைகளுக்கு தங்கும் இடமாகவும் உள்ளது. இதனால் பிளாட்பாரம் முழுவதும் அசுத்தமாக உள்ளது.

அதனால் தென்னக ரயில்வே துறை இந்த ரயில் நிலையத்தில் இங்கு வந்து ஆய்வு செய்து இந்த பிரச்சனைகளை உடன் தீர்க்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இரவில் குடிமகன்கள் பராக பயன்படுத்தி வருவதுடன் அதன் இருக்கைகளை அவர்கள் வசதிக்கு மாற்றி அமைத்து சுதந்திரமாக மது அருந்தி வருகின்றனர். அதனால் ஆங்காங்கே மது பாட்டிகள் சிதறி கிடக்கிறது.

Tags : Muthuppet railway station , Commuters suffer without basic amenities at Muthuppet railway station: Buildings are wasted due to poor construction
× RELATED தராசுகள் பறிமுதல் செய்ததை கண்டித்து...