2,715 பெண் காவலர்களுக்கு 2ம் கட்ட ‘ஆனந்தம்’ பயிற்சி: போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் தொடங்கி வைத்தார்

சென்னை: மாநகர காவல்துறையில் பணியாற்றும் 2,715 பெண் காவலர்களுக்கு வழங்கப்பட உள்ள 2ம் கட்ட ‘ஆனந்தம்’ பயிற்சி வகுப்பை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிலால் நேற்று தொடங்கி வைத்தார். சென்னை மாநகர காவல்துறையில் பணியாற்றும் பெண் காவலர்கள் மற்றும் பெண் இன்ஸ்பெக்டர்களுக்கு காவல் பணியிலும், வாழ்க்கையிலும் திறம்பட செயல்பட்டு வெற்றி பெறும் வகையில் கடந்த 24.9.2021ம் ஆண்டு போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் 3 நாள் சிறப்பு பயிற்சி முகாமை தொடங்கி வைத்தார்.

இந்த பயிற்சியில் பெண் காவலர்கள் மற்றும் பெண் அதிகாரிகளுக்கு கண், காது, மூக்கு, தொண்டை, ரத்த அழுத்தம், நீரிழிவு, கர்ப்பப்பை வாய்புற்றுநோய் மற்றும் மார்பக புற்றுநோய் உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டது. அதைதொடர்ந்து முதல்வர் உத்தரவுப்படி ‘ஆனந்தம்’ என பெயர் மாற்றம் செய்து இந்த திட்டம் தற்போது நடந்து வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் 48 பயிற்சி வகுப்புகள் அளிக்கப்பட்டு அதில் 2,216 பெண் காவலர்கள் முதல் பெண் இன்ஸ்பெக்டர்கள் வரை கலந்துகொண்டு பயனடைந்துள்ளனர்.

இந்த திட்டத்தின் 2ம் கட்ட ‘ஆனந்தம்’ பயிற்சி வகுப்பின் முதலாமாண்டு விழா மற்றும் 2ம் கட்ட பயிற்சி முகாமை நேற்று போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் வேப்பேரியில் உள்ள அனிதா மெதடிஸ் மெட்ரிக்குலேஷன் பள்ளி வளாகத்தில் தொடங்கி வைத்தார். 2ம் கட்ட பயிற்சியில் 2,715 பெண் காவலர்கள் மற்றும் பெண் அதிகாரிகள் கலந்துகொள்ள உள்ளனர்.இந்நிகழ்ச்சியில் கூடுதல் கமிஷனர் லோகநாதன், இணை கமிஷனர் சாமுண்டீஸ்வரி, பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர், துணை கமிஷனர் ராதாகிருஷ்ணன் மற்றும் ஆயுதப்படை காவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: