×

தற்கொலை படை மூலம் தாக்குதல் பாகிஸ்தான் மசூதியில் நடந்த குண்டுவெடிப்பில் 46 பேர் பலி

பெஷாவர்: பாகிஸ்தானில் பெஷாவர் நகரில் உள்ள மசூதியில் தற்கொலை படையினர் நடத்திய குண்டுவெடிப்பில் 46 பேர் பலியாகினர். நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்தனர். பாகிஸ்தானின் பெஷாவரில் உள்ள மசூதியில் நேற்று மதியம் வழக்கம்போல தொழுகை நடைபெற்றது. அப்போது, திடீரென பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதில் 46 பேர் பலியாகினர். மேலும், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தற்கொலைப்படையை சேர்ந்த தீவிரவாதி ஒருவர் தனது உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்க செய்ததாக போலீசார் தெரிவித்தனர். இந்த தாக்குதலில் மசூதியின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. கட்டிடத்தின் ஒருபகுதி சரிந்துள்ளதால் இடிபாடுகளில் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

மீட்பு பணி துரிதமாக நடைபெற்று வரும் நிலையில் பலி எண்ணிக்கை உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. போலீஸ் குடியிருப்புகள் அதிகம் கொண்ட பகுதியில் உள்ள மசூதியில் இந்த குண்டுவெடிப்பு நடந்திருப்பதால், தொழுகையில் ஈடுபட்டிருந்த பல போலீசார் உயிரிழந்திருக்கலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.  இந்த குண்டுவெடிப்பு குறித்து பாகிஸ்தான் போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். ஆப்கானிஸ்தானில் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் தனது சகோதரர் கொல்லப்பட்டதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக இந்த தற்கொலை படை தாக்குதலை நடத்தி இருப்பதாக தெஹ்ரிக் இ தலிபான் பாகிஸ்தான் அமைப்பின் கமாண்டர் உமர் காலித் குரசானி கூறியுள்ளார்.

Tags : Pakistan , 46 killed in Pakistan mosque blast
× RELATED சில்லிபாயிண்ட்….