×

கூட்டுறவு வங்கி வாயிலாக அளிக்கப்பட்ட நகைக்கடனில் கணக்கில் அடங்காத அளவிற்கு முறைகேடு நடந்துள்ளது: அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தகவல்

சென்னை: கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் தமிழ்நாடு அரசின் கணக்கு தணிக்கை அலுவலகம் சார்பில் தணிக்கை உதவி ஆய்வாளர்களுக்கான 5 நாட்கள் புத்தாக்க பயிற்சி நடைபெற உள்ளது. இதற்கான தொடக்க விழா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று நடந்தது. இதில், தமிழ்நாடு நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கலந்துகொண்டு பயிற்சியை தொடங்கி வைத்து, சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசின் தலைமை தணிக்கை இயக்குனர் ஜெய்சங்கர், நிதித்துறை செயலாளர் முருகானந்தம், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ், பதிவாளர் ரவி குமார், தமிழ்நாடு அரசு மின்விசை நிதி தலைமை மேலாண் இயக்குனர் அம்பலவாணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதில் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேசியதாவது: தேர்தலில் அளித்த நகை கடன் தள்ளுபடி வாக்குறுதியை நிறைவேற்றலாம் என்று ஆய்வு செய்ததில், கணக்கில் அடங்காத அளவிற்கு கூட்டுறவு வங்கியில் கடன் வழங்கப்பட்டு முறைகேடு நடந்துள்ளது. வருங்காலங்களில் அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்து தணிக்கை அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்துவது குறித்து ஆய்வு செய்து வருகிறோம். தமிழ்நாடு அரசு சிறந்த அரசாக அனைவரும் கூறி வருகிறார்கள். நிதித்துறையில் தமிழ்நாடு அரசு எப்பொழுதும் சிறந்த அரசாக விளங்க வேண்டும் என்பதே எனது எண்ணம். அதற்கு தணிக்கை அலுவலர்களான நீங்களும் உறுதுணையாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து, தமிழ்நாடு அரசின் தலைமை தணிக்கை இயக்குனர் ஜெய்சங்கர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: கொரோனா காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக இந்த பயிற்சி நடத்த முடியவில்லை. இருந்த போதிலும் அவர்கள் பணியின் போதே பயிற்சி எடுத்துக்கொண்டனர். அனைத்து வகையான தொழில்நுட்பங்களையும் இந்த பயிற்சி மூலம் உதவி ஆய்வாளர்களுக்கு வழங்க இருக்கிறோம். தமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் இந்த தணிக்கை குழு தற்போது வரை அடிப்படைகளில் மட்டுமே செயல்பட்டு வந்தது. தற்போது அவர்களின் செயலை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் வகையில் பயிற்சி நடைபெறும். இந்த காலக்கட்டத்தில் அனைத்தும் ஆன்லைன்மயமாக மாறி விட்டது. பதிவேடுகளின் அடிப்படையில்தான் தணிக்கை குழு செயல்பட்டு வருகிறது. இனிமேல் ஆன்லைன் மூலமாக செயல்படும் விதத்தில் இதை மேம்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags : Minister ,PDR ,Palanivel Thiagarajan , There has been an untold amount of fraud in the jewelery loan given through the Co-operative Bank: Minister BDR Palanivel Thiagarajan Information
× RELATED மன்னர்களைவிட மோசமான ஆட்சி நடந்து...