கிழக்கு கடற்கரை சாலையில் விபத்தில் வாலிபர் பலி: நண்பர் கவலைக்கிடம்

துரைப்பாக்கம்: புதுப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் லத்தீப் (21). இவரது நண்பர் அர்ஷாத் (20). நேற்று காலை இவர்கள் தங்களது நண்பர்கள் 3 பேருடன் சேர்ந்து 4 பைக்குகளில் கிழக்கு கடற்கரை சாலையில்  உள்ள கோவளத்திற்கு சென்று விட்டு, மாலையில் வீடு திரும்பிக் கொண்டு இருந்தனர்.  நீலாங்கரை பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது, லத்தீப் ஓட்டி வந்த பைக் நிலை தடுமாறி சென்டர் மீடியனில் வேகமாக  மோதியது. இதில் லத்தீப், மற்றும் பின்னால் அமர்ந்திருந்த அர்ஷாத் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.  

இதைபார்த்த அப்பகுதியினர், 2 பேரையும் மீட்டு,  ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி லத்தீப் பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த அர்ஷாத் உயிருக்கு ஆபத்தான நிலையில்  சிகிச்சை பெற்று வருகிறார். தகவலறிந்த அடையாறு போக்குவரத்து புலனாய்வு போலீசார், மருத்துவமனைக்கு விரைந்து சென்று, லத்தீப் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Related Stories: