×

சபரிமலையில் மண்டல பூஜைக்கு இன்னும் 4 நாள்; ஆரன்முளாவில் இருந்து இன்று காலை தங்க அங்கி ஊர்வலம் புறப்பட்டது: தரிசனத்திற்காக இன்று 89,990 பேர் முன்பதிவு

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் பிரசித்தி பெற்ற மண்டல பூஜை வரும் 27ம் தேதி ஆகும். அன்று மதியம் 12.30க்கும், 1 மணிக்கும் இடையே மண்டல பூஜை நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தீவிரமாக நடந்து வருகின்றன. மண்டல பூஜையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்படுவது வழக்கம். 420 பவுன் எடை கொண்ட தங்க அங்கியை திருவிதாங்கூர் மன்னர் சபரிமலை கோயிலுக்கு காணிக்கையாக வழங்கினார். பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள ஆரன்முளா பார்த்தசாரதி கோயில் பாதுகாப்பு அறையில் இந்த தங்க அங்கி வைக்கப்பட்டு உள்ளது.

ஒவ்வொரு வருடமும் மண்டல பூஜையை முன்னிட்டு இந்த தங்க அங்கி ஆரன்முளாவில் இருந்து ஊர்வலமாக சபரிமலைக்கு கொண்டு செல்லப்படுவது வழக்கம். வரும் 27ம் தேதி மண்டல பூஜை நடைபெற உள்ள நிலையில் தங்க அங்கி ஊர்வலம் இன்று காலை ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலில் இருந்து புறப்பட்டது.ஓமல்லூர், ரான்னி, பெருநாடு வழியாக 26ம் தேதி மதியம் இந்த ஊர்வலம் பம்பையை அடையும். பம்பை கணபதி கோயிலில் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக இந்த தங்க அங்கி வைக்கப்படும். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு மாலை 6.25 மணி அளவில் சன்னிதானத்தை அடையும். தொடர்ந்து தங்க அங்கி ஐயப்ப விக்கிரகத்தில் அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடைபெறும்.

தங்க அங்கியுடன் காட்சியளிக்கும் ஐயப்பனை தரிசிப்பதற்காக அன்று ஏராளமான பக்தர்கள் சபரிமலையில் குவிவார்கள். தொடர்ந்து அன்று இரவு 10 மணிக்கு கோயில் நடை சாத்தப்படும். மீண்டும் மகர விளக்கு கால பூஜைகளுக்காக டிசம்பர் 30ம் தேதி மாலை 5 மணிக்குத் தான் நடை திறக்கப்படும். இதற்கிடையே இன்றும் சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இன்று தரிசனத்திற்காக 89,990 பேர் முன்பதிவு செய்து உள்ளனர். இதனால் அதிகாலை 3 மணிக்கு நடை திறந்த போது தரிசனத்திற்காக பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். நாளை 90 ஆயிரத்திற்கும் அதிகமானோர் முன்பதிவு செய்துள்ளனர்.

குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள், வயதானவர்களுக்கு சன்னிதானத்தில் தனி வரிசை ஏற்படுத்தப்பட்டிருப்பதால் இவர்கள் தற்போது நீண்ட நேரம் வரிசையில் நிற்க வேண்டிய அவசியம் இல்லாமல் மிக எளிதில் தரிசனம் செய்து வருகின்றனர்.



Tags : Mandal Puja ,Sabarimala ,Aranmula , 4 days left for Mandal Puja at Sabarimala; Gold robe procession leaves Aranmula this morning: 89,990 people booked for darshan today
× RELATED வைகாசி மாத பூஜை சபரிமலை கோயில் நடை திறப்பு: பக்தர்கள் குவிந்தனர்