×

பிளாட்பாரத்தில் சிறுநீர், மலம் கழிப்பதா?வடசேரி பஸ் நிலையத்தை திறந்தவெளி கழிப்பிடமாக மாற்ற அனுமதிக்க முடியாது: மாநகராட்சி ஆணையர் ஆவேசம்

நாகர்கோவில்: வடசேரி பஸ் நிலையத்தில் இரவில் தங்குபவர்கள் பிளாட்பாரத்தில் சிறுநீர், மலம் கழிப்பதால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகிறார்கள். பஸ் நிலையத்தில் இரவில் தங்குபவர்கள் மீது இனி நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையர் ஆனந்தமோகன் கூறி உள்ளார். நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையத்தில் 4 பிளாட்பாரங்கள் உள்ளன. இவற்றில் முதல் பிளாடபாரத்தில் விரைவு போக்குவரத்து கழக பஸ்களும், தென்காசி, பாபநாசம் போன்ற வழித்தடங்களுக்கு செல்லும் அரசு போக்குவரத்து கழக பஸ்களும் இயக்கப்படுகின்றன.

2 வது பிளாட்பாரத்தில் இருந்து திருவனந்தபுரம், திருநெல்வேலி, மதுரை, திருச்செந்தூர், தூத்துக்குடி மார்க்கங்களுக்கு செல்லும் பஸ்கள் இயக்கப்படுகின்றன.
3, 4 வது பிளாட்பாரங்களில் இருந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படுகிறது. இதில் 2, 3 பிளாட்பாரம் மற்றும் 4 பிளாட்பாரத்தில் இரவு நேரங்களில் முதியவர்கள், ஆதரவற்றவர்கள் என பலர் தங்கி உள்ளனர். இதில் 4 வது பிளாட்பார பகுதியில் நரிக்குறவர்கள் குடும்பம், குடும்பமாக தங்கி இருக்கிறார்கள். இவ்வாறு இரவில் தங்குவதால் பல்வேறு அசம்பாவித சம்பவங்களும் நடக்கின்றன.

ஆதரவற்றவர்களுக்காக  நாகர்கோவில் மாநகராட்சி சார்பில் அபயகேந்திரம் என்ற அமைப்பு தொடங்கப்பட்டு அங்கு அவர்களுக்கு தங்குமிடம், 3 வேளை உணவு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இலவசமாக வழங்கப்படுகிறது. ஆனால் அங்கு செல்லாமல் பஸ் நிலைய பிளாட்பாரத்திலேயே படுத்து இருக்கிறார்கள்.
நரிக்குறவர்களும் வியாபாரம் முடிந்து தங்களது சொந்த ஊருக்கு செல்வதில்லை. இவ்வாறு இரவில் பிளாட்பாரத்தில் தங்குபவர்கள் பிளாட்பாரத்திலேயே மலம் கழித்தல், சிறுநீர் கழித்தல் போன்றவற்றில் ஈடுபடுகிறார்கள். இதனால் பயணிகள் அந்த பகுதியில் நிற்க முடிய வில்லை.

பலமுறை மாநகராட்சி இவர்களை எச்சரித்தும் கேட்பதில்லை. இந்த நிலையில் இன்று காலை மாநகராட்சி ஆணையர் ஆனந்தமோகன் வடசேரி பஸ் நிலையத்தில் திடீரென ஆய்வு செய்தார். அப்போது பிளாட்பார பகுதியில் இருந்த நிலையை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இப்படி மோசமாக்கி வைத்திருந்தால் பயணிகள் எப்படி நிற்க முடியும் என ஆவேசமாக கேட்டார். அப்போது அங்கிருந்த நரிக்குறவர்கள் நாங்கள் வியாபாரத்துக்காக தங்கி உள்ளோம் என்றனர்.
இதை கேட்ட ஆணையர் பயணிகளுக்கு இடையூறு இல்லாமல் நீங்கள் வியாபாரம் செய்வதில்லை.

அதே சமயத்தில் இனி இரவில் பஸ் நிலைய பிளாட்பாரத்தில் தங்க கூடாது. அவ்வாறு தங்கினால் காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். உங்களை பாதுகாக்க பல்வேறு சட்ட நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. உங்களுக்கு என ெகாடுக்கப்பட்ட இல்லத்துக்கு சென்று விட வேண்டும். இனி நரிக்குறவர்கள் இரவில் பஸ் நிலையங்களில் தங்க அனுமதி இல்லை என்றார். இதே போல் ஆதரவற்றோர் பஸ் நிலையத்தில் படுத்திருந்தால், அவர்களையும் உடனடியாக அபயகேந்திராவில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.

பஸ் நிலையம் தூய்மையாக இருக்க வேண்டும் என்றார். பின்னர் பஸ் நிலையத்தில் உள்ள கட்டண மற்றும் பொது கழிப்பறைகளை ஆணையர் பார்வையிட்டார். கழிப்பறைகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். அதிக கட்டணம் வசூலிக்க  கூடாது என எச்சரித்தார். ஆணையருடன் சுகாதார ஆய்வாளர் ராஜேஷ் மற்றும் அதிகாரிகள் உடன் சென்று இருந்தனர்.


Tags : Vadassery , Urinating and defecating on the platform?Vadassery bus station cannot be converted into an open toilet: Municipal commissioner outraged