×

விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் வரலாற்று வெற்றிக்காக முழு பலத்துடன் களம் இறங்கிய திமுக

* தோல்வி பயத்தில் ஒதுங்கியதா அதிமுக? பாஜவுக்கு பலமில்லாததால் பாமக போட்டி

சென்னை: நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி 39 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. இந்த சூழ்நிலையில், திமுகவிற்கு அடுத்த பரீட்சையாக விக்கிரவாண்டி தேர்தல் நடக்கிறது. விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ புகழேந்தி காலமானதை அடுத்து, ஜூலை 10ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் பரபரப்பு அடங்குவதற்கு முன் காலியான விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்திருப்பதன் மூலம் மீண்டும் ஒரு தேர்தல் பரபரப்புக்கு தமிழகம் தயாராகியுள்ளது.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன், முதல் கட்சியாக திமுக களத்தில் குதித்து வேட்பாளரை அறிவித்து, தேர்தல் பணிகளையும் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் முடுக்கி விட்டுள்ளார். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக விவசாய தொழிலாளர் அணியின் மாநில செயலாளர் அன்னியூர் சிவா போட்டியிடுகிறார். இதை தொடர்ந்து, நாம் தமிழர் கட்சி சார்பில் டாக்டர் அபிநயா போட்டியிடுவார் என அக்கட்சி அறிவித்தது.

முக்கிய எதிர்கட்சியான அதிமுக எப்போது வேட்பாளரை அறிவிக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. பாஜ வேட்பாளரை அறிவிக்கும் என்றும் அக்கட்சியினர் காத்திருந்தனர். ஆனால் விக்கிரவாண்டி தொகுதியில் வன்னியர் சமூகத்தினர் அதிகம் உள்ளதால், தங்களுக்கு விட்டுத் தர வேண்டும் என பாமக கேட்டது. இதை தொடர்ந்து அக்கட்சிக்கு இத்தொகுதி ஒதுக்கப்பட்டு பாமக சார்பில் சி.அன்புமணி போட்டியிடுவார் என நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலில் பெற்ற தோல்வி பற்றி எடப்பாடி பெரிதாக கவலைப்படவில்லை. 2019 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக போட்டியிட்ட வேட்பாளர்களின் எண்ணிக்கை என்ன? 2024 அதிமுக போட்டியிட்ட தொகுதிகள் எவ்வளவு என்பதையெல்லாம் ஆராயாமல் 1 சதவீதம் கூடுதல் வாக்கு பெற்றிருப்பதாக எடப்பாடி கூறினார். ஆகவே, அதிமுக இந்த இடைத்தேர்தலைப் புறக்கணித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்றும் அரசியல் விமர்சகர்கள் கூறி வந்தனர்.

ஏனெனில் விளவங்கோடு இடைத்தேர்தலில் காங். வேட்பாளர் 91,054 வாக்கு பெற்று பாஜ வேட்பாளரை 2வது இடத்திற்கு தள்ளி இருக்கிறார். அதிமுக வேட்பாளர் ராணி வெறும் 5267 ஓட்டுகள் மட்டுமே பெற்று படுதோல்வியை சந்தித்தார். நாம் தமிழர் கட்சி வேட்பாளரின் 8150 வாக்குகளைவிட குறைந்து 4வது இடத்திற்கு அதிமுக தள்ளப்பட்டுள்ளது. அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் பொதுச்செயலாளராக எடப்பாடி வந்த காலத்தில் இருந்து வரிசையாக 10 தேர்தல்களில் அதிமுக படுதோல்வி அடைந்துள்ளது.

அதன்படி 2017ல் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல், 2019 நாடாளுமன்ற தேர்தல், அதே ஆண்டு 22 சட்டசபை தொகுதி இடைத்தேர்தல், 2020 ஊரக உள்ளாட்சி தேர்தல், 2021 சட்டசபை தேர்தல், 2021ல் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல், 2022ம் ஆண்டு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், 2023ல் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல், 2020ல் கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தல் என மொத்தம் 10 தோல்விகளை எடப்பாடி தலைமையிலான அதிமுக சந்தித்தது.

தொடர்ந்து தோல்விகளை தழுவி வருவதால், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மீண்டும் படுதோல்வியை சந்தித்தால் பெரிய அவமானம் நேரும் என்பதால் தேர்தலை எதிர்கொள்ள அதிமுக யோசித்து வருவதாக கூறப்பட்டது. இன்னொருபுறம், நாடாளுமன்ற தேர்தல் தோல்வியினால் சோர்ந்துள்ள அதிமுக தொண்டர்கள், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 2ம் இடத்தை பெற்று விட வேண்டும் என பரபரப்பு காட்டுகிறார்கள். ஆனால், பாமக கூட்டணியில் இல்லாத நிலையில் இந்த தேர்தலில் போட்டியிட்டு கையைச் சுட்டுக் கொள்ள வேண்டாம் என்ற ஒரு ஆலோசனையிலும் அதிமுக தலைமை ஈடுபட்டது.

ஏதேனும் ஒரு காரணத்தை சொல்லி அதிமுக இடைத்தேர்தலைப் புறக்கணிக்கவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டது. அதன்படியே, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடவில்லை என்று எடப்பாடி அறிவித்துள்ளார். இது அதிமுக தொண்டர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த இடைத்தேர்தல் ஆளும் கட்சியான திமுகவுக்கும், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் முக்கியமானதாக கருதப்படுகிறது.

ஏனெனில் 2026 சட்டமன்ற தேர்தலில் அவர் 200 தொகுதிகளில் வெற்றி பெற இலக்கு வைத்துள்ளார். இந்த இடைத்தேர்தலில் இதுவரை இல்லாத அளவுக்கு வரலாறு காணாத பிரமாண்ட வெற்றியை பதிவு செய்யவும் திமுகவினருக்கு உத்தரவிட்டுள்ளார். அதற்கான பணிகளை திமுகவினர் வேகப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், பாஜவுக்கு விக்கிரவாண்டி தொகுதியில் எந்தவித செல்வாக்கும் கிடையாது. அதேநேரம் முக்கிய கட்சியான அதிமுக தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கிவிட்டது.

இதனால் திமுக- பாமக வேட்பாளருக்கு இடையேதான் போட்டி நிலவும். பாஜ கூட்டணியில் இடம்பெற்ற பாமக நாடாளுமன்ற தேர்தலில் பெரிய அளவில் வாக்குகள் கூட பெற முடியவில்லை. இதனால் திமுக வேட்பாளர் வரலாற்று வெற்றியை மீண்டும் பதிவு செய்ய வாய்ப்பிருப்பதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர். விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியை பொறுத்தவரை கடந்த 8 ஆண்டுகளில் 2 முறை இடைத் தேர்தலை சந்தித்துள்ளது.

மறைந்த திமுக எம்எல்ஏ நா.புகழேந்தி 2011 சட்டமன்றத் தேர்தலில் 93,730 வாக்கு பெற்றார். 2011 தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிட்டு திமுக சட்டமன்ற உறுப்பினரான கு.ராதாமணி 2019ம் ஆண்டு மறைந்தார். இந்த தொகுதியில் ஆட்சி காலத்திலேயே தனது 2 சட்டமன்ற உறுப்பினர்களை திமுக இழந்துள்ளது. 2019ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் நடந்த இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்செல்வன் 1,13,766 வாக்குகள் பெற்று 44,924 வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

60.29 சதவீத வாக்குகளை அதிமுக பெற்றது. எனவே இதை விட அதிக அளவிலான பிரமாண்ட வரலாற்று வெற்றியை பதிவு செய்வதே திமுகவின் இலக்காக உள்ளது. இதனால் திமுக முக்கிய நிர்வாகிகள், அமைச்சர்கள் என பெரும் படையே விக்கிரவாண்டி தொகுதியில் தேர்தல் பணிகளில் முழு பலத்தோடு களம் இறங்கியுள்ளனர்.

* 13 ஆண்டுகளில் 5வது முறையாக எம்எல்ஏ தேர்வு
விக்கிரவாண்டி தொகுதியை பொறுத்தவரை தொகுதி மறுசீரமைப்புக்கு பிறகு 2011ல் சட்டப்பேரவை பொதுத் தேர்தல் நடந்தது. அடுத்து 2016ல் வெற்றிபெற்ற திமுக எம்எல்ஏ ராதாமணி இறந்ததால், 2019ல் இடைத்தேர்தல் நடந்தது. தொடர்ந்து 2021ல் 4வது முறையாக தேர்தல் நடத்தப்பட்ட நிலையில் புகழேந்தி எம்எல்ஏ உடல்நலக்குறைவால் இறந்ததால் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. 13 ஆண்டுகளில் 5வது முறையாக விக்கிரவாண்டி தொகுதி மக்கள் சட்டமன்ற உறுப்பினரை தேர்வு செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுவரை பதவி வகித்தவர்கள்
1951- கோவிந்தசாமி நாயக்கர் (உழைப்பாளர் கட்சி)
1957- கோவிந்தசாமி நாயக்கர் (திமுக)
1962- கிருஷ்ணன் (காங்கிரஸ்)
1967- ராமன் (திமுக)
1977- கண்ணன் (அதிமுக)
1980- கண்ணன் (அதிமுக)
1984- சுப்பிரமணியன் (அதிமுக)
1989- அழகுவேலு (திமுக)
1991- சுப்பிரமணியன் (அதிமுக)
1996- அழகுவேலு (திமுக)
2001- சுப்பிரமணியன் (அதிமுக)
2006- புஷ்பராஜ் (திமுக)
2011- ராமமூர்த்தி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்)
2016- ராதாமணி (திமுக)
2019- முத்தமிழ்செல்வன் (அதிமுக) இடைத்தேர்தல்
2021- புகழேந்தி (திமுக)
2024- மீண்டும் இடைத்தேர்தல்.

The post விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் வரலாற்று வெற்றிக்காக முழு பலத்துடன் களம் இறங்கிய திமுக appeared first on Dinakaran.

Tags : Dimuka ,Vikrawandi Assembly midterm elections ,Bhamaka ,Chennai ,BJP ,Tamil Nadu ,Vikriwandi election ,Dimuq ,Dinakaran ,
× RELATED தன்னிடம் ஒழுங்கினமாக நடந்து கொண்ட...