×

ஐயப்பன் கோயில் திருவிழாவில் கந்தசஷ்டி கவசம் பாடிய இஸ்லாமிய மாணவி

பெரம்பூர்: சென்னை புளியந்தோப்பு சிவராவ் சாலையில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக ஸ்ரீசக்தி விநாயகர் ஆலயம் உள்ளது. புளியந்தோப்பு, பேசின் பிரிட்ஜ் மற்றும் ஓட்டேரி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் தினமும் கோவிலுக்கு வந்து வழிபடுகின்றனர். இந்த ஆலயத்தின் நண்பர்கள் குழு சார்பில், 4ம் ஆண்டு ஐயப்ப மலர் பூஜை நேற்று நடைபெற்றது. இந்த மலர் பூஜையின் சிறப்பு அம்சமாக சபரிமலை போல 18 படிகள்  அமைக்கப்பட்டு அதில் மாலை அணிந்தவர்கள் மட்டும் 18 படிகளில் ஏறி மேலே சென்று ஐயப்பனை தரிசிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த ஐயப்ப மலர் பூஜை விழாவில் அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான ஐயப்ப பக்தர்கள் பொதுமக்கள் மகளிர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு பஜனை பாடல்கள் பாடி ஐயப்பனுக்கு மலர் பூஜை நடத்தினர். இதில், புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த  108 பெண்கள் திருவிளக்கு ஏந்தி சிறப்பு பூஜை செய்து ஐயப்பனை  வணங்கினர். ஐயப்பனுக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டு கற்பூர தீபாராதனை காண்பிக்கப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

புளியந்தோப்பு பகுதி இஸ்லாமியர்கள் அதிகம் நிறைந்த பகுதி என்பதால் மலர் பூஜையின் சிறப்பு அம்சமாக புளியந்தோப்பை சேர்ந்த அப்துல் முஜீத் என்பவரின் மகள் ஹூனா என்பவர் கந்தசஷ்டி  கவசம் பாடலை பாடி அசத்தினார். இதை அனைவரும் ரசித்து கேட்டு சிறுமியை பாராட்டினர். இதுபோல் விநாயகர் சதுர்த்தி, திருப்பதி குடை, பொங்கல் ஆகிய பண்டிகை நாட்களில் இந்துக்களுடன் சேர்ந்து இஸ்லாமியர்களும் விமரிசையாக கொண்டாடி வருகின்றனர்.

மேலும் அந்த நாளில் அன்னதானம் வழங்குகின்றனர். “இந்துக்களின் அனைத்து பண்டிகைகளிலும் முஸ்லிம்கள் அதிகளவில் கலந்துகொண்டு சிறப்பிக்கின்றனர். இதன்படி ஐயப்ப பூஜையிலும் இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர். புளியந்தோப்பு பகுதியில் அனைத்து மதத்தினரும் ஒற்றுமையாக உள்ளோம்’’ என்று இந்து அமைப்பை சேர்ந்த ராமபூபதி தெரிவித்தார்.

Tags : Ayyappan temple festival , An Islamic student who sang Kandashasti Kavasam at the Ayyappan temple festival
× RELATED சென்னையில் 9, 13, 14, 15வது மண்டலங்கள்...