×

 அமைச்சர் பிலாவல் மீதான இந்தியாவின் விமர்சனத்தை நிராகரித்தது பாகிஸ்தான்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் வெளியுறவு துறை அமைச்சர் பிலாவல் பேசியதை நாகரீகமற்ற கருத்து என குறிப்பிட்ட இந்தியாவின் விமர்சனத்தை பாகிஸ்தான் நிராகரித்துள்ளது. ஐநா கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்ற வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பாகிஸ்தானை  தீவிரவாதத்தின் மையம் என்று குறிப்பிட்டு இருந்தார். இதற்கு பதிலடி தரும் வகையில் பாகிஸ்தான் வெளியுறவு துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ, பிரதமர் மோடி குறித்து தனிப்பட்ட முறையில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறினார்.

இது தொடர்பாக வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி வெளியிட்ட அறிக்கையில், ‘‘இந்தியாவை சீண்டுவதற்கு பாகிஸ்தானிற்கு தகுதி இல்லை. பிலாவலின் நாகரீகமற்ற பேச்சானது பாகிஸ்தானில் அதிகரித்து வரும் தீவிரவாதிகளையும், அவர்களின் பினாமிகளையும் பயன்படுத்த இயலாமையின் விளைவாக தோன்றுகிறது” என்று குறிப்பிட்டு இருந்தார். அமைச்சர் பிலாவல் குறித்த இந்தியாவின் கருத்து தொடர்பாக அந்நாட்டு ஊடகங்கள் வெளியுறவு துறை அமைச்சகத்தை கேள்வி எழுப்பிய நிலையில், இந்தியாவின் கருத்தை பாகிஸ்தான் நிராகரித்துள்ளது.

இது குறித்து பாகிஸ்தான் வெளியுறவு துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில்,‘‘பாகிஸ்தானை அவதூறாக பேசுவதிலும், தனிமைப்படுத்துவதிலும் இந்தியா தோல்வியடைந்து வரும் விரக்தியின் பிரதிபலிப்பாகும். சர்வதேச கண்காணிப்பு அமைப்பின்(எப்ஏடிஎப்) சாம்பல் பட்டியில் இருந்து பாகிஸ்தானின் பெயர் நீக்கப்பட்டுள்ளது மற்றும் தீவிரவாத எதிர்ப்பு முயற்சிகளுக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்ததை தொடர்ந்து, பாகிஸ்தானை குறிவைத்து இந்தியா அவதூறு செய்வதற்கு சர்வதேச தளங்களை பயன்படுத்துகிறது. இந்தியா தனது அண்டை நாடுகளிடம் குறுகிய மனப்பான்மையிலான கொள்கையை பின்பற்றுகிறது” என்று குறிப்பிட்டுள்ளது.

Tags : Pakistan ,India ,Minister ,Bilawal , Pakistan rejected India's criticism of Minister Bilawal
× RELATED கலவர வழக்கில் இம்ரான்கான் விடுதலை