×

திருக்கழுக்குன்றம் அருகே பாலாற்று பாலம் மூடல்: கிராம மக்கள் தவிப்பு

திருக்கழுக்குன்றம்: மாண்டஸ் புயல் மழையால் திருக்கழுக்குன்றம் தாலுகாவிற்கு உட்பட்ட பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 97 ஏரிகளில் 50 ஏரிகள் முழுதும் நிரம்பியுள்ளது. யூனியன் கட்டுப்பாட்டில் உள்ள 105 ஏரிகளில் 75 ஏரிகள் முழுதும் நிரம்பியுள்ளன. மீதமுள்ள ஏரிகள் 95 சதவீதம் நிரம்பியுள்ளது. இந்நிலையில் 909 ஏரிகளில் 442 ஏரிகள் நிரம்பியுள்ள நிலையில், ஏரிகளின் இருந்து திறக்கப்படும் உபரிநீர் பாலாற்றுக்கு சென்று கல்பாக்கம் அடுத்த வாயலூர் அருகே கடலில் கலக்கிறது. இதனால் பாலாற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால், திருக்கழுக்குன்றம் தாலுகாவிற்கு உட்பட்ட பாலாற்றங்கரையோர கிராமங்களான மணப்பாக்கம், உதயம்பாக்கம், ஆனூர், எலுமிச்சம்பட்டு, வல்லிபுரம், விளாகம், பாண்டூர், பாக்கம், எடையாத்தூர், நெரும்பூர், இரும்புலிச்சேரி, அட்டவட்டம், நல்லாத்தூர், ஆயப்பாக்கம், வாயலூர் மற்றும் லத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கல்குளம், வேப்பபஞ்சேரி, கடலூர், சத்திரம்பேட்டை ஆகிய கிராம மக்கள் பாலாற்றங்கரையோரம் செல்லவேண்டாம் என்றும், ஆற்றில் குளிக்கவோ, துணி துவைக்கவோ, ஆற்றை கடக்கவோ, ஆற்றில் மீன் பிடிக்கவோ, ஆற்றுவெள்ளத்தை படம் பிடிக்கவோ, செல்பி எடுக்கவோ வேண்டாம் என  எச்சரிக்கப்பட்டுள்ளது. காவல் துறையினரும் ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தி வருகின்றனர். பாலாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் இரும்புலிச்சேரி (கன்னிக்கோயில்) பாலாற்றில் போடப்பட்டிருந்த தற்காலிக பாலம் ஏற்கெனவே மூழ்கியது.

 இந்நிலையில் கடந்த 2 தினங்களாக பாலாற்றில் வெள்ளம் அதிகரித்ததால் வல்லிபுரம்-ஈசூர் பாலாற்று பாலம் நேற்று இரவு முதல் மூழ்கும் அளவு வெள்ளநீர் பாய்ந்தோடுவதால் பாதுகாப்பு நலன் கருதி பாலத்தின் இரு பகுதிகளிலும் இரும்பு தடுப்பு அமைத்து வருவாய் துறை மற்றும் காவல்துறையினர் மூடி போக்குவரத்தை தடை செய்துள்ளனர். இதனால் மதுராந்தகம் - திருக்கழுக்குன்றம் இடையேயான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. வல்லிபுரம் பாலாற்றில் பைப்  அமைத்து திருக்கழுக்குன்றம் பேரூராட்சிக்கு குடிநீர் வழங்கப்படுகிறது. இதுமட்டுமின்றி வல்லிபுரம், ஆனூர், விளாகம், பாண்டூர் உள்ளிட்ட பாலாற்றை ஒட்டியுள்ள ஊராட்சிகளுக்கு அந்தந்த பகுதிகளில் உள்ள பாலாற்றில் போர் அமைத்து பைப் லைன்கள் மூலம் பொதுமக்களுக்கு பாலாற்று நீர் சப்ளை செய்யப்படுகிறது.



Tags : Palatu Bridge ,Thirukalukukundam , Balatu bridge closure near Thirukkalukkunram: Villagers distressed
× RELATED எடப்பாடி பழனிசாமி, நயினார்...