சென்னை: கோயம்பேடு மார்க்கெட்டில் முகூர்த்த நாள் காரணமாக காய்கறிகள், வாழையிலை, பூக்கள் ஆகியவற்றின் விலை ‘கிடுகிடு’ என உயர்ந்துள்ளது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் தொடர்ந்து சில நாட்கள் திடீரென காய்கறிகள் குறைந்த விலைக்கே விற்பனை ஆனது. இந்நிலையில், கடந்த இரண்டு தினங்களுக்கு முன் நள்ளிரவு ஏற்பட்ட மாண்டஸ் புயலால், கோயம்பேடு மார்க்கெட்டுக்கு சென்னை புறநகர் வியாபாரிகள் வராததால் சுமார் 3,000 டன் காய்கறிகள் தேக்கம் அடைந்தது. இதனால், மொத்த வியாபாரிகள் வந்த விலைக்கு காய்கறிகளை விற்றனர். இந்நிலையில், நேற்று காலை கோயம்பேடு மார்க்கெட்டிற்கு 7,000 டன் காய்கறிகள் வந்தன.
முகூர்த்தம் காரணமாகவும், தேங்கிய காய்கறிகள் குறைந்த விலைக்கு விற்கப்பட்டதால், மொத்த மார்க்கெட்டில் புதுவரவான காய்கறிகளே கிடைத்தன. இதனால், அனைத்து காய்கறிகள் விலை கிடுகிடுவென உயர்ந்தது. ஒருகிலோ நாட்டு மற்றும் பெங்களூர் தக்காளி ரூ.10லிருந்து ரூ.20 க்கும், கேரட் ரூ.30 லிருந்து ரூ.80க்கும், பீன்ஸ் ரூ.10 லிருந்து ரூ.70க்கும் கத்திரிக்காய் ரூ.15 லிருந்து ரூ.40க்கும் வெண்டைக்காய் ரூ.10லிருந்து ரூ.30க்கும் பீட்ரூட் ரூ.25 லிருந்து ரூ.40க்கும், பீர்க்கங்காய் ரூ.25லிருந்து ரூ.40க்கும் பச்சை மிளகாய் ரூ.20 லிருந்து ரூ.60க்கும், பாவக்காய் ரூ.30லிருந்து ரூ.40க்கும் காலிபிளவர் ரூ.15லிருந்து ரூ.25க்கும் இஞ்சி 50 லிருந்து ரூ.70க்கும், எலுமிச்சை ரூ. 30 லிருந்து, ரூ.60க்கும், கோவைக்காய் ரூ.15லிருந்து ரூ.25க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இதுகுறித்து, காய்கறி மார்க்கெட் மொத்த வியாபாரிகள் சங்க தலைவர் எஸ்.எஸ். முத்துகுமார் கூறும்போது, ‘கோயம்பேடு மார்க்கெட்டிற்கு நேற்று காலை 7,000 டன் காய்கறிகள் வந்தன. முகூர்த்த நாள் என்பதால், அனைத்து காய்கறிகளின் விலை கிடுகிடுவென உயர்ந்தது. அடுத்த சில நாட்களில் காய்கறிகளின் விலை படிப்படியாக குறையும்.’’ என கூறினார். இதைப்போன்று, வாழையிலை மற்றும் பூக்கள் விலையும் அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் கோயம்பேடு மார்க்கெட்டில் முகூர்த்த நாளை முன்னிட்டு ஒரு கட்டு வாழை இலை ரூ.2,000 க்கும் ஒரு வாழை இலை ரூ.10 க்கும் விற்பனை செய்யப்பட்டது.
நேற்று காலை வாழை இலை கட்டு விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. ஒரு கட்டு வாழை இலை ரூ.3,000க்கும் ஒரு வாழை இலை ரூ.15க்கும் விற்பனை செய்யபட்டது. இதுகுறித்து வாழை இலை வியாபாரி ஒருவர் கூறும்போது, ‘‘முகூர்த்த நாள் என்பதால், வாழை இலையின் விலை கிடுகிடுவென உயர்ந்தது. வரத்து குறைவு மற்றும் முகூர்த்தநாள் காரணமாக விலை அதிகரித்துள்ளது. முகூர்த்தநாள் முடிந்த பிறகு வாழை இலை விலை குறையும்.’’ என கூறினார். காய்கறிகள், வாழை இலை விலை அதிகரித்ததைப்போல, பூக்கள் விலையும் நேற்று உயர்ந்து காணப்பட்டது.
நேற்று முன்தினம் ஒரு கிலோ மல்லி ரூ.2, 300 க்கும் முல்லை ரூ.1, 200க்கும், கனகாம்பரம் ரூ.700க்கும், சம்பங்கி ரூ.100க்கும், பன்னீர் ரோஸ் ரூ.120க்கும், சாக்லேட் ரோஸ் ரூ.120க்கும், அரளி ரூ.250க்கும், சாமந்தி ரூ.150க்கும் விற்கப்பட்டது. நேற்று முகூர்த்த நாள், கனமழை மற்றும் வரத்து குறைவால் கோயம்பேடு பூ மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லி ரூ.3,000க்கும் முல்லை ரூ.2000க்கும், கனகாம்பரம் ரூ.800க்கும் அரளி பூ ரூ.250க்கும், பன்னீர்ரோஸ் ரூ.180க்கும் சாக்லெட் ரோஸ் ரூ.200க்கும், சாமந்தி ரூ.200க்கும் விற்பனை ஆனது.