×
Saravana Stores

ரூ.12.39 கோடியில் மதிப்பில் கட்டப்பட்ட அம்பத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்றம் திறப்பு: ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா திறந்து வைத்தார்

அம்பத்தூர்: அம்பத்தூரில் ரூ.12.39 கோடியில் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தை சென்னை உயர் நீதிமன்றம் பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா நேற்று திறந்து வைத்தார். இதில், சிறப்பு விருந்தினர்களாக அமைச்சர்கள் ரகுபதி, சேகர்பாபு, நாசர் கலந்துகொண்டனர். சென்னை அம்பத்தூரில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. இங்கு போதுமான இடவசதி இல்லாததால், அம்பத்தூர் தொழிற்பேட்டைக்கு தற்காலிகமாக மாற்றப்பட்டது. பழைய கட்டிடத்தில் நீதிமன்றம் இயங்கி வந்ததால் புதிய கட்டிடம் கட்டித் தரவேண்டும் என வக்கீல்கள், பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

அதன்படி, தமிழக அரசின் பொதுப்பணித்துறை சார்பில் அம்பத்தூரில் பழைய இடத்தில் புதிய ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்ட முடிவு செய்யப்பட்டது. 2019 ஜூன் 24ம் தேதி அப்போதைய மாவட்ட நீதிபதி ஜெ.செல்வநாதன் புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார்.அதன்படி, 1.46 ஏக்கர் பரப்பளவில் ரூ.12 கோடியே 38 லட்சத்து 71 ஆயிரம் மதிப்பீட்டில் சார்பு நீதிமன்றம், மாவட்ட உரிமையியல் நீதி மன்றம், குற்றவியல் நீதித்துறை நடுவர் மற்றும் விரைவு நீதி மன்றங்கள் தனித்தனியாக குளிர்சாதன வசதியுடன் பிரத்யேகமான அறைகளுடன் கட்டப்பட்டன.

மேலும், நீதிபதிகளுக்கு தனி மின் தூக்கி, 400 வழக்கறிஞர்கள் வழக்காடும் வகையில் அறைகள், காவலர்களுக்கான ஓய்வறை, பார்வையாளர்களான ஆண், பெண் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தனித்தனி கழிப்பறை வசதி, கைதிகளை அமர வைக்க தனி அறை, அரசு துறை அலுவலர்களுக்கு தனித்தனி அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. புதிய நீதிமன்ற கட்டிடத்தின் திறப்பு விழா நேற்று முன்தினம் நடந்தது. இதில், சிறப்பு விருந்தினராக சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி (பொறுப்பு) டி.ராஜா கலந்துகொண்டு ஒருங்கிணைந்த நீதிமன்றம் மற்றும் நீதியரசர் குடியிருப்பு ஆகியவற்றை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினர்களாக சட்டத்துறை மற்றும் நீதி நிர்வாக சிறைத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் மற்றும் மாவட்ட நீதிபதி செல்வசுந்தரி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags : Ambatore Combined Court Opening ,iCourt ,Chief Justice , 12.39 Crore Ambattur Integrated Court Inauguration: ICourt Incharge Chief Justice T. Raja inaugurated
× RELATED சட்ட விரோத குவாரிகள் தொடர்பாக புகார்...