×

தி.நகர் பேருந்து நிலையத்தில் நடமாடும் பேருந்து கண்காட்சி: பொதுமக்கள் கண்டு ரசித்தனர்

சென்னை, டிச.16: சென்னை மாநகர் போக்குவரத்து கழகம் சார்பில், தி.நகர் பேருந்து நிலையத்தில் நடமாடும் பேருந்து கண்காட்சி, பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்பட்டுள்ளது. இலவச அனுமதியுடன் நடைபெறும் இந்த கண்காட்சி, சென்னையின் பொது போக்குவரத்து வரலாறு, வளர்ச்சி, தொழில்நுட்ப மாற்றங்கள் மற்றும் எதிர்கால திட்டங்களை ஒரே இடத்தில் அறிந்து கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நடமாடும் பேருந்து கண்காட்சியின் மூலம், எம்டிசி உருவான காலத்திலிருந்து இன்று வரை சென்னை மாநகரில் பேருந்து போக்குவரத்து எவ்வாறு வளர்ச்சி பெற்றுள்ளது என்பதை காட்சிப்படுத்தி உள்ளனர். பழைய கால பேருந்து சேவை முறைகள், டிக்கெட் வழங்கும் நடைமுறைகள், ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களின் பங்கு, பயணிகளின் வாழ்க்கையில் எம்டிசி வகித்த முக்கிய இடம் ஆகியவை படங்கள், விளக்க பலகைகள் மற்றும் தகவல் குறிப்புகள் மூலம் விளக்கப்பட்டுள்ளன.

கண்காட்சியில், பழைய எம்டிசி பேருந்து மாதிரிகள், காலப்போக்கில் மாறிய பேருந்து வடிவமைப்புகள், எஞ்சின் தொழில்நுட்ப முன்னேற்றங்கள், எரிபொருள் சேமிப்பு முயற்சிகள் போன்றவை இடம் பெற்றுள்ளன.
மேலும், தற்போதைய காலகட்டத்தில் செயல்படுத்தப்பட்டுள்ள மின்சார பேருந்துகள், குறைந்த மாசு உமிழ்வு பேருந்துகள், பெண்கள், மாணவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு வசதிகள் குறித்தும் விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளன. சென்னை நகரின் போக்குவரத்து நெரிசலை குறைப்பதில் எம்டிசி பேருந்துகள் எவ்வாறு உதவுகின்றன, தனியார் வாகன பயன்பாட்டை குறைத்து சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு எவ்வாறு பங்களிக்கின்றன என்பதையும் இந்தக் கண்காட்சி எடுத்துரைக்கிறது.

குறிப்பாக, பசுமை போக்குவரத்து, கார்பன் உமிழ்வைக் குறைக்கும் முயற்சிகள், டிஜிட்டல் டிக்கெட், ஸ்மார்ட் கார்டு, ஜிபிஎஸ் அடிப்படையிலான பேருந்து கண்காணிப்பு போன்ற நவீன முயற்சிகளும் இதில் இடம்பெற்றுள்ளன.
பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசு ஊழியர்கள், பொதுமக்கள் என அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் எளிய மொழியில் தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன. குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு எம்டிசி குறித்து ஆர்வம் ஏற்படுத்தும் வகையில், கேள்விபதில் பகுதிகள் மற்றும் தகவல் விளக்கங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

தி.நகர் பேருந்து நிலையம் போன்ற மக்கள் அதிகம் கூடும் பகுதியில் இந்த கண்காட்சி நடத்தப்படுவதால், தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் இதனை பார்வையிடும் வாய்ப்பு உள்ளது. சென்னை மாநகர் போக்குவரத்துக் கழக அதிகாரிகள், இந்தக் கண்காட்சி மூலம் பொதுமக்களுடன் நேரடி தொடர்பு ஏற்படுத்தி, அவர்களின் கருத்துகள் மற்றும் ஆலோசனைகளைப் பெறுவதே முக்கிய நோக்கம் என தெரிவித்துள்ளனர். சென்னையின் அடையாளங்களில் ஒன்றாக விளங்கும் எம்டிசி பேருந்துகள், நகர மக்களின் அன்றாட வாழ்க்கையில் எவ்வளவு முக்கிய பங்கு வகிக்கின்றன என்பதைக் நினைவூட்டும் வகையில் இந்த நடமாடும் பேருந்து கண்காட்சி அமைந்துள்ளது. பொதுமக்கள் அனைவரும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, எம்டிசியின் பயணத்தை நேரில் காண அழைக்கப்பட்டுள்ளனர்.

Tags : T. Nagar ,Chennai ,Chennai Metropolitan Transport Corporation ,
× RELATED மெரினா கடற்கரையில் வீடற்றோருக்கான...