×

கள்ளக்குறிச்சி பள்ளி கலவர வழக்கில் கணவர் குண்டர் சட்டத்தில் கைதானதை எதிர்த்து மனைவி மனு: தமிழக அரசு பதில் தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: கள்ளக்குறிச்சி பள்ளி கலவர வழக்கில் கைது செய்யப்பட்டவரை குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்ததை எதிர்த்து அவரது மனைவி தாக்கல் செய்த மனுவுக்கு நான்கு வாரங்களில் பதிலளிக்கும்படி, தமிழக அரசு, கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் உள்ளிட்டோருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி மரண சம்பவத்தை தொடர்ந்து, கடந்த ஜூலை 17ம் தேதி பள்ளியில் கலவரம் வெடித்தது. பள்ளியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. பொருட்கள் சேதப்படுத்தப்பட்டன. இந்த கலவரம் தொடர்பாக உயர் நீதிமன்றம் நியமித்த சிறப்பு புலன் விசாரணைக்குழு, பலரை கைது செய்துள்ளது.  

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட விஜய் என்பவரை குண்டர் சட்டத்தில் சிறையிலடைக்க கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர், கடந்த செப்டம்பர் 26ம் தேதி உத்தரவிட்டார். இந்த உத்தரவை ரத்து செய்து தனது கணவரை விடுவிக்க கோரி அவரது மனைவி தமிழ்பிரியா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில், தனது கணவர் எந்த கலவரத்தையும் தூண்டாத நிலையில், அவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அவர் தாக்கல் செய்த ஜாமீன் மனு விழுப்புரம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், ஜாமீனில் விடுதலையாவதை தடுக்கும் வகையில், உரிய நடைமுறைகளை பின்பற்றாமல் குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் நீதிபதி டீக்காராமன் அமர்வு, நான்கு வாரங்களில் பதிலளிக்கும்படி, தமிழக உள்துறை செயலாளர், கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் உள்ளிட்டோருக்கு உத்தரவிட்டனர்.

Tags : Tamil Nadu Govt ,ICOCART ,Kallakkurichi , Kallakurichi school riots case against husband's arrest under thug law: Tamil Nadu govt ordered by High Court to respond
× RELATED ஜெய்பீம் பட உண்மை சம்பவத்தில்...