×

இரும்பு கம்பியால் தாக்கி, சூடு வைத்து சித்ரவதை 2வது மனைவியின் குழந்தை மீது சுடுகஞ்சி ஊற்றி கொன்ற கொடூரம்: ஆரணி அருகே மேஸ்திரி வெறிச்செயல்

ஆரணி: ஆரணி அருகே 2வது மனைவியின் 2 வயது குழந்தையை இரும்பு கம்பியால் தாக்கியும், சூடு வைத்தும் சித்ரவதை செய்து வந்த கட்டிட மேஸ்திரி, சுடுகஞ்சியை ஊற்றி கொடூரமாக கொலை செய்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த சேவூரை சேர்ந்தவர் மாணிக்கம்(31). கட்டிட மேஸ்திரி. கருத்து வேறுபாடு காரணமாக சில ஆண்டுகளுக்கு முன்பு அவரது மனைவி பிரிந்து சென்றுவிட்டாராம். மாணிக்கத்தின் உறவினரான ஆரணி அடுத்த சந்தவாசல் பகுதியை சேர்ந்த ஜெயசுதா(29), தனியார் மருத்துவமனையில் நர்சாக இருந்தார்.

சென்னையில் உள்ள மருத்துவமனையில் பணிபுரிந்தபோது பூந்தமல்லியை சேர்ந்த குணசேகரன் என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். இவர்களது 2 வயது மகன் ஏனோக்ராஜ்(2). குடும்ப தகராறு காரணமாக குணசேகரை பிரிந்து, ஜெயசுதா குழந்தையுடன் சந்தவாசல் பகுதியில் தனியாக வசித்து வந்தார்.கடந்த 8 மாதங்களுக்கு முன்பு ஜெயசுதாவை மாணிக்கம் 2வது திருமணம் செய்து கொண்டார். சில மாதங்களில் ஜெயசுதா கர்ப்பமாகியுள்ளார். மாணிக்கத்திற்கு ெதரியாமல் அவர் கர்ப்பத்தை கலைத்துவிட்டாராம்.  ஆத்திரமடைந்த மாணிக்கம், ஜெயசுதாவின் 2 வயது குழந்தையை தடியாலும், இரும்பு கம்பியாலும் அடித்தும், சூடு வைத்தும் சித்ரவதை செய்துள்ளார்.

இதனால் ஏற்படும் காயங்களை கீழே விழுந்து அடிபட்டதாக கூறி, சிகிச்சைக்கு அழைத்து சென்று வந்துள்ளனர். கடந்த மாதம் 23ம் தேதி மாணிக்கம், சாதம் வடித்த சுடுகஞ்சியை எடுத்து குழந்தை ஏனோக்ராஜ் மீது ஊற்றியுள்ளார். இதில் படுகாயமடைந்த குழந்தை அலறினான். சத்தம் கேட்டு ஓடி வந்த ஜெயசுதா, குழந்தையை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு சிகிச்சை முடிந்து சில நாட்களுக்கு பிறகு வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். இதுதொடர்பாக, கடந்த 4ம் தேதி ஜெயசுதா சைல்டுலைனில் புகார் செய்தார். அதன்பேரில், ஆரணி தாலுகா போலீசார் வழக்கு பதிந்து மாணிக்கத்தை தேடி வந்தனர்.

இந்நிலையில், கடந்த 9ம் தேதி, காயம் முழுமையாக ஆறாததால் குழந்தை ஏனோக்ராஜை வேலூர் அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் சேர்த்து சிகிச்சை அளித்து மறுநாள் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். பின்னர் குழந்தை உடல் நிலை மீண்டும் மோசமானது. ஆரணி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் குழந்தை ஏனோக்ராஜ் பரிதாபமாக இறந்தான். புகாரின்படி ஆரணி தாலுகா போலீசார் வழக்கு பதிந்து, மேஸ்திரி மாணிக்கத்தை சேவூரில் கைது செய்தனர்.


Tags : Chitravatha ,Maestry ,Arani , Iron rod, heat, torture, Arani, master's frenzy
× RELATED ரூ.10 ஆயிரம் லஞ்சம் பெற்ற புகாரில் ஆரணி...