ராஜிவ்காந்தி கொலை வழக்கு நளினி உள்ளிட்ட 6 பேரும் விடுதலை: கவர்னர் காலதாமதம் செய்ததால் உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

புதுடெல்லி: ராஜிவ்காந்தி கொலை வழக்கு குற்றவாளிகளை விடுதலை செய்வதில் தமிழக ஆளுநர் காலதாமதம் செய்த நிலையில், உச்ச நீதிமன்றத்தின் தனிப்பட்ட அதிகாரமான 142 சட்டப்பிரிவு பேரறிவாளனை போன்று நளினி உட்பட மற்ற 6 பேருக்கும் பொருந்தும் என உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம் 6 பேரையும் அதிரடியாக விடுதலை செய்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேரும் கடந்த 31 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளனர்.

இதில், சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்யும் முழு அதிகாரம் மாநில ஆளுநருக்கு உண்டு என உச்ச நீதிமன்றம் கடந்த 2018ம் ஆண்டு உத்தரவிட்டது. இதற்கு ஒன்றிய அரசு மற்றும் சிபிஐ தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. முன்னதாக, தமிழக அமைச்சரவை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை கூட ஜனாதிபதி கடந்த 2017ம் ஆண்டு இறுதியில் நிராகரித்து விட்டார். இதையடுத்து பேரறிவாளன் தரப்பில் தனியாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ‘ராஜிவ்காந்தி கொலை வழக்கில் பயன்படுத்தப்பட்ட பெல்ட் வெடிகுண்டுக்கு பேட்டரி நான் வாங்கி கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஆனால் அதற்கான ஒரு ஆதாரத்தை கூட சிபிஐ தரப்பில் இதுவரை கொடுக்கப்படவில்லை. அதனால் இந்த வழக்கில் எனக்கு கொடுக்கப்பட்ட ஆயுள் தண்டனையை நிறுத்தி வைத்து, என்னை விடுதலை செய்ய வேண்டும்’ என குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் 9ம் தேதி ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. பின்னர் நடத்தப்பட்ட விசாரணையை தொடர்ந்து, ‘‘பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது. அதேப்போன்று தமிழக அமைச்சரவையின் தீர்மானத்தின் மீது முடிவெடுக்காமல் கிடப்பில் போட்டு வைத்திருந்ததையும் ஏற்க முடியாது. ஏனெனில் அது அரசியல் அமைப்புக்கு எதிரானதாகும்.

மேலும் 161வது சட்டப்பிரிவின் கீழ் ஆளுநருக்கு உள்ள தனிப்பட்ட அதிகாரம் அனைத்தும் நீதிமன்றத்தின் ஆய்வுக்கு உட்பட்டதாகும். மேலும் தமிழக அமைச்சரவை எடுத்த தீர்மானத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்திருக்க வேண்டும். ஆனால், அதனை அவர் செய்யாமல் காலதாமதம் செய்து ஜனாதிபதிக்கு தீர்மானத்தை அனுப்பி வைத்து உள்ளார். அதற்கான அதிகாரம் ஆளுநருக்கு கிடையாது. இந்த விவகாரத்தில் ஆளுநர் அனைத்து சட்ட விதிகளையும் மீறி உள்ளது தெளிவாக தெரியவருகிறது. மேலும் மாநில அமைச்சரவை தீர்மானத்தில் தலையிட ஒன்றிய அரசுக்குக்கூட அதிகாரம் கிடையாது.

இதைத்தவிர முக்கியமாக இந்திய தண்டனைச் சட்டம் 302ன் கீழ் தண்டனை பெற்று இருப்பதால், அந்த சட்டம் பொதுப்பட்டியலில் உள்ளதால் பேரறிவாளன் வழக்கில் ஒன்றிய அரசு தான் முடிவு செய்ய வேண்டும் என்ற அவர்களின் வாதத்தை கண்டிப்பாக ஏற்க முடியாது. அதனை நீதிமன்றம் நிராகரிக்கிறது. குறிப்பாக பேரறிவாளனை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு முழு அதிகாரம் உண்டு. அதனால் இந்த விவகாரத்தில் பேரறிவாளனின் சிறை நன்னடத்தை, அவரது உடநலம், மருத்துவ பரிசோதனை, இத்தனை ஆண்டுகள் சிறையில் கழித்தது ஆகிய அனைத்தையும் கருத்தில் கொண்டு உச்ச நீதிமன்றத்தின் தனிப்பட்ட அதிகாரமான சட்டப்பிரிவு 142ஐ பயன்படுத்தி பேரறிவாளனை நேரடியாக விடுதலை செய்கிறோம்.

இந்த உத்தரவை ஏற்று பேரறிவாளனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்’’ என உச்ச நீதிமன்றம் கடந்த மே மாதம் 29ம் தேதி அதிரடியாக  தீர்ப்பு வழங்கியிருந்தது. இதையடுத்து ராஜிவ்காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும் முருகன், சாந்தன், நளினி, ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய ஆகிய 6 பேரும் உச்ச நீதிமன்றத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக தனித்தனியாக மனு தாக்கல் செய்திருந்தனர். அதில், ‘சிறை நன்னடத்தையுடன் இருக்கிறோம்.  

மேலும் சிறையில் உழைத்து சம்பாத்த ஊதியம் அனைத்தையும் பொதுநலத்தோடும், கல்விக்காகவும் செலவிடுகிறோம். எனவே சமுதாய அக்கறை கொண்ட நபர்கள் என்பதால் சிறையில் இருந்து வெளியே வந்தாலும் எங்களால் எந்தவித தீங்கும் ஏற்படாது. அதேப்போன்று சமுதாயத்திற்கு எதிர்மறையாகவும் செயல்படமாட்டோம். அதனால் இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு பேரறிவாளனை விடுதலை செய்தது போன்று இவ்வழக்கில் இருந்து எங்களையும் விடுவிக்க வேண்டும்’ என தெரிவித்திருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் பி.வி. நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராகேஷ் திவேதி, ‘‘முன்னாள் பிரதமர் கொலை வழக்கு குற்றவாளிகள் 7 பேரையும் விடுதலை செய்யக்கோரி தீர்மானம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு பின்னர் ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. உள்துறை அமைச்சகத்தின் கவனத்திற்கும் அது கொண்டு செல்லப்பட்டது. ஆனால் ஆளுநர் தரப்பில் எந்தவொரு உரிய பதிலும் அளிக்கப்படவில்லை. தீர்மானத்துக்கு ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் உள்ளது’’ எனத் தெரிவித்தார்.

மனுதாரர்கள் தரப்பு மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன், ‘‘பேரறிவாளன் விவகாரத்தில் பிறப்பிக்கப்பட்ட  உத்தரவுகள் அனைத்தும் இவர்களுக்கு பொருந்தும். இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசின் கருத்து கேட்கப்பட வேண்டிய அவசியம் இல்லை. ஒன்றிய அரசுக்கு எதிராகத்தான் பேரறிவாளன் வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது’’ எனக் கூறினார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘‘இந்த வழக்கில் எவ்வளவு பேருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது?’’, எனக் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த மனுதாரர்கள் தரப்பு வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன், ‘‘நான்கு பேருக்கு வழங்கப்பட்ட மரண தண்டனை ஆயுளாக குறைக்கப்பட்டது. மீதமுள்ளவர்களுக்கு ஆயுள் வழங்கப்பட்டது. ஆனால், 30 ஆண்டுகளுக்கும் மேலாக இவர்கள் சிறையில் உள்ளனர். உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒட்டுமொத்த வாழ்க்கையும் சிதைந்து போயுள்ளது. எனவே பேரறிவாளன் விடுதலையை அடிப்படையாக வைத்தும், இவர்கள் நன்னடத்தையை கணக்கில் கொண்டும் விடுவிக்க வேண்டும்’’ என கோரிக்கை வைத்தார்.  

இதையடுத்து நீதிபதிகள் அளித்த உத்தரவில் கூறியதாவது: கல்வி, நன்னடத்தை, அமைச்சரவை முடிவு ஆகியவற்றின் அடிப்படையில் இந்த உத்தரவை நாங்கள் பிறப்பிக்கிறோம். ராபர்ட் பயஸ், சாந்தன், சுதந்திர ராஜா (ஜெயக்குமார்), ரவிச்சந்திரன், முருகன் ஆகியோர் சிறையில் இருந்தபடியே பட்டப்படிப்பு படித்துள்ளனர். அவர்களின் நன்னடைத்தை திருப்திகரமாகவே உள்ளது. நளினி, ஒரு பெண். 30 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ளார்.   அவரது நன்னடத்தை திருப்தி அளிக்கிறது. முதுகலை டிப்ளமோ படித்து கல்வித் தரத்தையும் சிறையில் இருந்தவாறு மேம்படுத்தியுள்ளார். அனைவருமே வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த சிறையில் இருந்தவாறு முயற்சித்துள்ளனர். ஒருசிலருக்கு உடல்நிலை குறைபாடும் உள்ளது. எனவே அனைத்தையும் கருத்தில் கொண்டு பார்க்கும் போது, பேரறிவாளன் விவகாரத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பின்  அனைத்து அம்சங்களும் இவர்களுக்கும் பொருந்தும். எனவே எந்த நிபந்தனையும், கட்டுப்பாடும் இன்றி உடனடியாக இவர்கள் ஆறு பேரையும் விடுதலை செய்ய வேண்டும்.

மேலும் உச்ச நீதிமன்றத்தின் சிறப்பு அதிகாரமான 142வது சட்டப் பிரிவை  பயன்படுத்தி ராஜிவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளை விடுவித்தது போன்று இந்த வழக்கில் குற்றவாளிகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும் முருகன், சாந்தன், நளினி, ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய 6 பேரையும் விடுதலை செய்கிறோம். உச்ச நீதிமன்றத்தின் 142 சட்டப் பிரிவு என்பது அனைவருக்கும் சமமான ஒன்றாகும். அதனை அடிப்படையாக கொண்டு இவர்களும் விடுதலை செய்யப்படுகின்றனர். இவ்வாறு நீதிபதிகள் அதிரடியான தீர்ப்பை வழங்கி உள்ளனர். உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பால் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து வந்த முருகன், சாந்தன், நளினி, ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய 6 பேரும் விரைவில் விடுதலை ஆக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: