×

புரட்டாசி முடிந்து முதல் ஞாயிற்றுக்கிழமை சென்னை காசிமேட்டில் மீன்வாங்க குவிந்த பொதுமக்கள்: வஞ்சிரம் கிலோ ரூ. 800, சங்கரா ரூ. 400, இறால் ரூ. 300க்கு விற்பனை

சென்னை: புரட்டாசி மாதம் முடிந்து முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால் சென்னை காசிமேட்டில் நேற்று மீன் வாங்க கூட்டம் அதிகமாக காணப்பட்டது. வஞ்சிரம் கிலோ ரூ. 800, சங்கரா ரூ. 400, இறால் ரூ. 300க்கு விற்பனை செய்யப்பட்டது. புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாகும். இந்த மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் பெருமாள் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடக்கும். பெரும்பாலான இந்துக்கள், இந்த மாதத்தில் விரதம் இருப்பார்கள். அதனால், வீடுகளில் அசைவ உணவு சமைக்க மாட்டார்கள்.

இதனால் மீன், மட்டன், சிக்கன் விற்பனை மந்தமாக நடைபெறுவது வழக்கம். மேலும் சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் புரட்டாசி மாதத்தில் கூட்டம் வழக்கத்தை விட வெகுவாக குறைந்து காணப்படுவது வழக்கம். இந்த நிலையில் புரட்டாசி மாதம் முடிந்துள்ளது. அது மட்டுமல்லாமல் புரட்டாசி மாதம் முடிந்து நேற்று முதல் ஞாயிற்றுக்கிழமை ஆகும். மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் அனைவரும் வீட்டில் இருப்பது வழக்கம். இதனால் நேற்று காலை முதல் ஏராளமானோர் மீன்வாங்க காசிமேடு மார்க்கெட்டுக்கு படையெடுத்தனர். இதனால் காசிமேடு பகுதி முழுவதும் அதிகாலை முதல் மக்கள் கூட்டம் அலைமோதியதை காண முடிந்தது.

சிறு வியாபாரிகள், பொதுமக்கள் ஏராளமானோர் மீன்களை போட்டி போட்டு வாங்கி சென்றனர். அதே நேரத்தில் கடந்த வாரத்தை காட்டிலும் மீன் விலை குறைந்து காணப்பட்டது. இதனால், அசைவ பிரியர்கள் அதிகமான மீன்களை வாங்கினர். அதாவது இந்த வாரம் விசைப்படகுகள் அதிக அளவில் கடலுக்கு சென்று திரும்பின. இதனால் மீன்களின் வரத்து அதிகமாக இருந்தது. இதனால் மீன் விலை கணிசமாக குறைந்து காணப்பட்டது. கடந்த வாரம் வஞ்சிரம் ரூ. 1100க்கு விற்கப்பட்டது. இது நேற்று ரூ. 800க்கு விற்கப்பட்டது.

வவ்வால் மீன் ரூ. 600லிருந்து ரூ. 400 ஆகவும், பாறை மீன் ரூ. 450லிருந்து ரூ. 340 ஆகவும் விலை குறைந்து காணப்பட்டது. அதே நேரத்தில் சிறிய வகை வஞ்சிரம் ரூ. 600, வவ்வால் ரூ. 400, பாறை ரூ. 340, தேங்காய் பாறை ரூ. 380, சீலா ரூ. 400, திருக்கை ரூ. 250, கானாங்கத்தை மீன் ரூ. 200, சங்கரா ரூ. 400, இறால் ரூ. 300, நண்டு ரூ. 250, கடம்பா ரூ. 260க்கும் விற்கப்பட்டது. மீன்விலை குறைவால் அசைவ பிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


Tags : Puratasi ,Chennai Casimate , Chennai, fish, crowded public, shrimp Rs. 300 for sale
× RELATED விளைநிலங்களில் மண் வளத்தை...