×

பிரதமர் இல்லத்தில் 20 நாளில் 4 முறை திடீர் ஆலோசனை; மத்திய அமைச்சரவை மறுசீரமைப்பில் 7 பேர் புதிய முகம்?.. 7 மாநில தேர்தலை மையப்படுத்தி இலாகா ஒதுக்கீடு

புதுடெல்லி: மத்திய அமைச்சரவை மறுசீரமைப்பு தொடர்பாக இம்மாதத்தில் மட்டும் இதுவரை 4 முறை பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை நடத்தி உள்ளார். அடுத்தாண்டு நடைபெறவுள்ள 7 மாநில தேர்தலை மையப்படுத்தி அமைச்சரவை மறுசீரமைப்பு இருக்கும் என்று கூறப்படுகிறது. புதியதாக 7 பேருக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை 2வது முறையாக பதவியேற்ற பின்னர், இதுவரை அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படவில்லை. அதற்குள் சிரோன்மணி மற்றும் சிவசேனா ஆகிய கட்சிகள் கூட்டணியில் இருந்து விலகியதால், அக்கட்சிகளை சேர்ந்த 2 அமைச்சர்கள் ராஜிநாமா செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அமைச்சராக இருந்த ராம்விலாஸ் பஸ்வான் உடல்நலக் குறைவால் இறந்தார். மற்றொருவர் விபத்தில் சிக்கியதால் தற்போதைக்கு அமைச்சர் பதவியில் இல்லை. கிட்டதிட்ட 4 அமைச்சர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. அதனால், மத்திய அமைச்சரவையில் மாற்றம் ஏற்படும் என பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே, அடுத்த 12 மாதங்களில் 7 மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதால், அந்த மாநிலங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து தேர்தலை எதிர்கொள்ள பாஜக தலைமை திட்டமிட்டுள்ளது. இந்த தேர்தல் முடிவுகள் தான் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கான அரசியலை தீர்மானக்க உள்ளன. அதனால், மத்திய அமைச்சரவையை மறுசீரமைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் தயாராக உள்ளன. இன்றைய நிலையில், பல அமைச்சர்கள் 3 முதல் 4 துறைகளை கவனிப்பதால், அமைச்சரவை மறுசீரமைப்பில் 7 புதிய முகங்களுக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. பல அமைச்சர்களின் மீதான புகார்களால், அவர்களின் பதவிகள் பறிக்கப்படலாம். இதுகுறித்து பிரதமர் அலுவலக வட்டாரங்கள் கூறுகையில், ‘கிட்டதிட்ட 24 அமைச்சகங்களிலும் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. இதுவரை, இந்த ஜூன் மாதத்தில் மட்டும் பிரதமரின் இல்லத்தில் 4 முக்கிய கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. வரும் ஜூலை இரண்டாவது வாரத்தில் நாடாளுமன்ற கூட்டத் தொடர் நடைபெறுவதற்கு முன்னர், அமைச்சரவையில் மறுசீரமைப்பு இருக்கும். பஞ்சாப் (காங்கிரஸ்) தவிர, உத்தரபிரதேசம், உத்தரகண்ட், குஜராத், இமாச்சல பிரதேசம், கோவா, மணிப்பூர் மாநிலங் பாஜக ஆட்சி நடப்பதால், அம்மாநிலங்களில் மீண்டும் ஆட்சியை கைப்பற்ற வியூகங்கள் வகுக்கப்படுகின்றன. இவற்றில் உத்தரபிரதேசத்தை தவிர மற்ற மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி எதிர் களத்தில் உள்ளது. அதனால், இந்த மாநிலங்களுக்கு அமைச்சரவையில் அதிக பிரதிநிதித்துவம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. முக்கிய இலாகா மாற்றங்களில் விவசாயம், கல்வி, ரயில்வே, நகர்ப்புற வளர்ச்சி மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து ஆகியன உள்ளன. அதேபோல், சுகாதார அமைச்சகத்தில் சிறந்த மருத்துவ நிபுணருக்கு இணை அமைச்சர் பதவி வழங்க பட்டியல் தயாராகி வருகிறது’ என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. …

The post பிரதமர் இல்லத்தில் 20 நாளில் 4 முறை திடீர் ஆலோசனை; மத்திய அமைச்சரவை மறுசீரமைப்பில் 7 பேர் புதிய முகம்?.. 7 மாநில தேர்தலை மையப்படுத்தி இலாகா ஒதுக்கீடு appeared first on Dinakaran.

Tags : New Delhi ,Modi ,Dinakaran ,
× RELATED முஸ்லிம்கள் பற்றி பேச வில்லையா?...