×

தீபாவளிக்கு தரமான, சுகாதாரமான உணவு பொருட்கள் தயாரிக்க வேண்டும்: கலப்படம், செயற்கை நிறமி கூடாது, கலெக்டர் அமிர்த ஜோதி எச்சரிக்கை

சென்னை: தீபாவளியை முன்னிட்டு இனிப்பு, கார வகைகள் மற்றும் பேக்கரி உணவு பொருட்களை தயாரிப்பவர்கள்  தரமான மூலப்பொருட்களைக் கொண்டு சுகாதாரமான முறையில் தயாரித்து பாதுகாப்பாக  உணவு பொருட்களை பொது மக்களுக்கு வழங்க வேண்டும் என்று கலெக்டர் அமிர்த ஜோதி வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னை மாவட்ட கலெக்டர் எஸ்.அமிர்த ஜோதி வெளியிட்ட அறிக்கை: தீபாவளி பண்டிகையில் இனிப்பு மற்றும் கார வகைகளுக்கு சீட்டு நடத்துபவர்கள், தற்காலிகமாக திருமண மண்டபங்களில் பெரிய அளவில் இனிப்பு, கார வகைகளை தயாரிக்கும் நிறுவனங்கள் உள்பட அனைத்து இனிப்பு கார வகைகள் தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களும் உணவு பாதுகாப்பு துறையில் பதிவு செய்து உரிமம் பெற்று பொதுமக்களுக்கு விநியோகம் செய்வது உணவு பாதுகாப்பு சட்டம் மற்றும் விதிகளில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மேலும், இனிப்பு, கார வகைகள் மற்றும் பேக்கரி உணவு பொருட்களை தயாரிப்பவர்கள் தரமான மூலப்பொருட்களைக் கொண்டு சுகாதாரமான முறையில் தயாரித்து பாதுகாப்பான உணவு பொருட்களை பொதுமக்களுக்கு வழங்க வேண்டும். உணவு தயாரிப்பில் கலப்படமான பொருட்களையோ, சட்டத்தில் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு அதிகமான செயற்கை நிறமிகளையோ உபயோக்கிக்கக் கூடாது. இனிப்பு, கார வகைகளை தயாரிக்கும் உணவு கையாள்பவர்கள் முழு உடல் நலத்துடன் தொற்று நோய்கள் இல்லாவண்ணம் பணியில் அமர்த்தப்பட வேண்டும். ஒருமுறை பயன்படுத்திய சமையல் எண்ணெய் மறுபடியும் சூடுபடுத்தி உணவு தயாரிக்க பயன்படுத்தக்கூடாது. பேக்கிங் செய்யப்பட்ட உணவு பொருட்களுக்கு விவரச்சீட்டு இடும் பொழுது அதில் தயாரிப்பாளரின் முழு முகவரி, உணவு பொருளின் பெயர், தயாரிப்பு அல்லது பேக்கிங் செய்யப்பட தேதி, சிறந்த பயன்பாட்டு காலம் (காலாவதியாகும் காலம்), சைவ மற்றும் அசைவ குறியீடு ஆகியவற்றை அவசியம் குறிப்பிட வேண்டும்.

விற்பனைக்காக காட்சிப்படுத்தப்படும் தட்டுகளில் இனிப்பு வகைகளை தயாரித்த தேதி மற்றும் உபயோகிக்கும் காலம் ஆகியவை பொதுமக்கள் அறியும் வண்ணம் அச்சடித்து காட்சிப்படுத்த வேண்டும். உணவு பொருட்களை விற்பனை செய்த பின்னர் வழங்கும் ரசீது, பில்களில் உணவு அங்காடியின் உரிமம் எண் அல்லது பதிவு எண்ணை அச்சடித்து இருத்தல் வேண்டும். உணவு பொருட்களை ஈக்கள், பூச்சிகள் மற்றும் கிருமி தொற்று இல்லாத சுகாதாரமான சூழலில் பொதுமக்களுக்கு விற்பனை செய்ய வேண்டும். பண்டிகை காலத்தில் மட்டும் பலகாரங்கள் தயாரிப்பவர்கள் உள்பட அனைத்து தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களும் உடனடியாக http://foscos.fssai.gov.in என்ற இணைய தளத்தில் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டத்தின் 2006ன் கீழ் தங்களது வணிகத்தினை பதிவு உரிமம் பெற்றுக் கொள்ள வேண்டும். மேலும் உணவு (இனிப்பு மற்றும் காரவகைகள்) தயாரிப்பாளர்கள் அனைவரும் உணவு பாதுகாப்பு அடிப்படை பயிற்சி பெற்றிருக்கவேண்டும். இதுதொடர்பான உணவு புகார்கள் ஏதும் இருப்பின் 94440 42322 என்ற வாட்ஸ்அப் புகார் எண்ணிற்கு பொதுமக்கள் புகார்களை தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Diwali ,Amirtha Torch , Prepare quality, hygienic food products for Diwali: no adulteration, no artificial colouring, collector amrtha jyothi alert
× RELATED தேர்தல் கெடுபிடியால் ஆட்டம் கண்ட...