×

தேர்தல் கெடுபிடியால் ஆட்டம் கண்ட ஆட்டுச்சந்தை, நகை தொழில்: ரூ.100 கோடி ரம்ஜான் வியாபாரம் ‘டல்’; தங்கம் வியாபாரமும் 50% சரிவு

தமிழ்நாடு முழுவதும் வாரம்தோறும் ஒவ்வொரு நாட்களிலும் ஆட்டு சந்தை நடைபெற்று வருகிறது. இதன் மூலம் தினசரி பல கோடி வர்த்தகம் நடைபெறும். குறிப்பாக தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ், ரம்ஜான், பக்ரீத் போன்ற பண்டிகை காலங்களில் நடைபெறும் ஆட்டு சந்தையில் அதிகளவிற்கு வர்த்தகம் நடைபெறும். அப்போது சுமார் ரூ.100 கோடிக்கும் மேல் வர்த்தகம் நடக்கும். தமிழகம் மற்றும் புதுவையில் வருகிற 19ம் தேதி நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் ரூ.50 ஆயிரத்திற்கு மேல் பணம் எடுத்து செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இதனால் வாரம் தோறும் நடைபெறும் ஆட்டு சந்தைகள் தற்போது ஆட்டம் கண்டுள்ளன. பணம் எடுத்து செல்வதில் கட்டுப்பாடு உள்ளதால் ஆடுகளை வாங்க முடியாமல் வியாபரிகள் திணறி வருகிறனர். ஆடுகளை விற்க முடியாமல் விவசாயிகள் மற்றும் ஆட்டின் உரிமையாளர்கள் விழிபிதுங்கி உள்ளனர். வருகிற 11ம் தேதி ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனால் அதிகளவு ஆடுகள் விற்பனையாகும் என்று காத்திருந்த விவசாயிகள் மற்றும் ஆட்டின் உரிமையாளர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சி உள்ளது.

தேர்தல் ஆணையத்தின் கெடுபிடி மற்றும் பறக்கும் படை அதிகாரிகளின் சோதனையால் தமிழகத்தில் அமோகமாக நடைபெறும் ஆட்டு சந்தை தற்போது ஆட்கள் இல்லாமல் காத்து வாங்கி வருகிறது. ரம்ஜான் பண்டிகையையொட்டி நேற்று நடந்த மதுரை மாவட்டம் திருமங்கலத்தை நடைபெற்ற ஆட்டுச்சந்தையில் ரூ. 6 கோடி, விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் ரூ.3 கோடி, கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தாரப்பள்ளியில் நடைபெற்ற ஆட்டு சந்தையில் ரூ.14 கோடிக்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டன.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே அய்யலூரில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டுச்சந்தையில் தேர்தல் கெடுபிடி காரணமாக குறைந்த அளவு பணம் மட்டுமே வியாபாரிகள் எடுத்து வந்தனர். இதனால் பலா ஆடுகள் விற்பனை செய்யப்படவில்லை. ரம்ஜான் பண்டிகை அடுத்த வாரம் கொண்டாடப்பட உள்ளதால் ஆடுகளை வாங்க அதிகளவு பணத்தை கொண்டு செல்ல அனுமதிக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு வியாபாரிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதேபோல், கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து வரலாற்று இல்லாத அளவில் ரூ.50 ஆயிரத்தை தாண்டியது. விலை உயர்வு மற்றும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளின் கெடுபிடி பாரணமாக தங்கத்தின் விற்பனை பாதியாக சரிந்துள்ளதாக நகைக்கடை உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து சேலத்தை சேர்ந்த நகைக்கடை வியாபாரிகள் கூறியதாவது: சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறிய, பெரிய நகைக்கடைகள் உள்ளன. இங்கு நாள் ஒன்றுக்கு சுமார் ரூ.10 கோடி அளவில் நகைகளின் விற்பனை இருக்கும். தற்போது விலை உயர்வால் நகை வாங்குவோர் கடும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். குறிப்பாக பெண்ணுக்கு திருமணம் நிச்சயம் செய்து இருப்போர் கடும் பாதிப்பில் உள்ளனர். அதே நேரத்தில் தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ளதால் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகனங்களை சோதனையிட்டு வருகின்றனர். நகை வாங்க பணம் கொண்டு வந்தால், எங்கே பணத்தை பறித்துக்கொள்வார்களோ என்ற பயத்தில், நகை வாங்க பொதுமக்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். தங்கத்தின் விலை அதிகரிப்பு, தேர்தல் கெடுபிடியால் கடந்த 15 நாட்களுக்கு மேலாக விற்பனை 50 சதவீதம் வரை சரிந்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post தேர்தல் கெடுபிடியால் ஆட்டம் கண்ட ஆட்டுச்சந்தை, நகை தொழில்: ரூ.100 கோடி ரம்ஜான் வியாபாரம் ‘டல்’; தங்கம் வியாபாரமும் 50% சரிவு appeared first on Dinakaran.

Tags : Ramzan ,Tamil Nadu ,Diwali ,Pongal ,Christmas ,Pakreet ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம்!.