×

பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாக இருக்கும் நடிகை மீரா மிதுனை கண்டுபிடிக்க முடியவில்லை: முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் போலீஸ் தகவல்

சென்னை: நடிகை மீரா மிதுன், தனது இருப்பிடத்தை அடிக்கடிக் மாற்றிக் கொண்டு, தலைமறைவாக இருந்து வருவதால் பிடிவாரன்ட் பிறப்பிக்கபட்ட அவரை கைது செய்ய முடியாத நிலை உள்ளதாக காவல் துறை தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. பட்டியலினத்தவர்கள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துக்களை வெளியிட்டதாக, நடிகை மீரா மிதுன் மீதும் அவருக்கு உடந்தையாக இருந்ததாக அவரது நண்பர் சாம் அபிஷேக் ஆகியோர் மீது வன்கொடுமை  தடுப்பு சட்டத்தின் கீழ் மத்திய குற்றப் பிரிவு போலீசார் கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வழக்கு பதிவு செய்து, கைது செய்தனர். பின்னர் ஜாமீனில் வெளிவந்த இவர்களுக்கு எதிராக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில்  குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

கடந்த ஆகஸ்ட் 6ம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மீரா மீதுன் ஆஜராகாததால், அவருக்கு எதிராக ஜாமீனில் வெளி வர முடியாத கைது வாரன்ட் பிறப்பித்து முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கு முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சிறப்பு அரசு வழக்கறிஞர் எம்.சுதாகர் ஆஜராகி, பிடிவாரண்ட் பிறப்பிக்கபட்ட மீரா மீதுனை பல இடங்களில் போலீசார் தேடி வருகிறார்கள். அவர் இருப்பிடத்தை அடிக்கடி மாற்றி தலைமறைவாக உள்ளார்.

பெங்களூருவில் தலைமறைவாக இருப்பதாக வந்த தகவலின் படி அங்கு சென்று பார்த்தபோது அங்கிருந்து வேறு இடத்துக்கு அவர் சென்றுவிட்டார். செல்போன் எண்ணையும் அடிக்கடி மாற்றி வருகிறார். விரைவில் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிடுவோம் என்று தெரிவித்தார். அப்போது நீதிபதி, கடந்த இரண்டு மாதத்திற்கு மேல் வாரன்ட் நிலுவையில் உள்ளது. கைது செய்ய உரிய நடவடிக்கை போலீசார் எடுக்கவில்லை என்று அதிருப்தி தெரிவித்து விரைந்து கைது செய்யுமாறு போலீசாருக்கு அறுவுறுத்தி விசாரணையை அக்டோபர் 19ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்.

Tags : Meera Mithun ,Principal Sessions Court , Absconding actress Meera Mithun issued warrant issued: police informs Principal Sessions Court
× RELATED சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகிறார் செந்தில் பாலாஜி