×

சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் 3 இடங்களில் ₹20 கோடி மதிப்பீட்டில் விலங்கு இனக்கட்டுப்பாடு மையங்கள்: ஜூலையில் பயன்பாட்டுக்கு வருகிறது

சென்னை, மே 19: சென்னையில் 3 இடங்களில் ₹20 கோடி மதிப்பீட்டில் விலங்கு இனக்கட்டுப்பாடு மையங்கள் அமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. வரும் ஜூலை மாதம் இவை பயன்பாட்டுக்கு திறக்கப்படுகிறது, என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னையில் தெரு நாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதேநேரம், நாய்களைப் பாதுகாக்க கடுமையான சட்டங்கள் இருப்பதால், நாய்கள் பெருக்கத்தையும், அவற்றால் பொதுமக்களுக்கு ஏற்படும் தொந்தரவுகளையும் கட்டுப்படுத்துவதில் சிக்கல் உள்ளது. வளர்ப்பு நாய்கள் மனிதர்களை தாக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.

குறிப்பாக சென்னையில், வளர்ப்பு நாய்கள் சிறுமியை கடித்து குதறிய சம்பவத்தை தொடர்ந்து நாய்கள் மீதான அச்சம் அதிகரித்துள்ளது. பொதுவாகவே நாய்கள் வளர்ப்பதற்கு இடவசதிகள் இருக்க வேண்டும். ஆனால் நெருக்கமான சென்னையில் மக்கள் வசிதிப்பதற்ேக இடப்பற்றாக்குறை இருக்கும் சூழ்நிலையில் வளர்ப்பு நாய்களுக்கு என தனி இடத்துக்கு எங்கே போவது. இப்படிபட்ட சூழ்நிலையிலும் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்கள் தங்களது வளர்ப்பு நாய்களை தங்கள் படுக்கை அறையில் கட்டிபோட்டு வளர்க்கின்றனர்.

தினமும் வாக்கிங் போகும் போது அவற்றை தங்களுடன் வெளியில் அழைத்து வருகின்றனர். இதனால் தனது உரிமையாளரை தவிர மற்றவர்கள் அனைவரும் அந்த வளர்ப்பு நாய்களுக்கு எதிரி போலவே தெரியுமாம். எனவே உரிய முறையில் நாய்களை வளர்க்காவிட்டால் மற்றவர்களை பதம் பார்த்து விடும் என்கிறார்கள். இப்படிப்பட்ட நிகழ்வுகள் சென்னையில் தொடர் கதையாக இருக்கிறது. இதனால் நாய்கள் வளர்க்க சென்ைன மாநகராட்சி கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. பூங்காங்களுக்கு நாய்களை அழைத்து சென்றால் செயின் கட்டி, நாய்கள் வாய் மூடப்பட்டிருக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டு விதிமுறைகளை அறிவித்துள்ளது. அதுவும் குறிப்பாக நாய்கள் உள்ளிட்ட செல்லப் பிராணிகள் வளர்ப்பவர்கள் கட்டாயம் உரிமம் பெற்றிருக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.

மேலும், உரிமம் பெறாதவர்களுக்கு ₹1000 அபராதம் மட்டுமல்ல உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. உரிமம் பெறாத உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்ததை தொடர்ந்து, செல்லப் பிராணிகள் வளர்க்க உரிமம் பெறாத பலரும் ஆன்லைன் மூலம் உரிமம் பெற ஆர்வம் காட்டி வருகின்றனர். சென்னையில் நாய், பூனை உள்ளிட்ட செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி, கடந்த ஒரே வாரத்தில் செல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெற 6 ஆயிரத்து 713 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில், உரிய ஆவணங்களை சமர்பிக்காத 3 ஆயிரத்து 337 பேரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. 2 ஆயிரத்து 376 பேரின் விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளது.

கடந்த 5ம்தேதியில் இருந்து இதுவரை 1000 பேருக்கு புதிதாக உரிமம் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக, கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 2 ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். இதுவரை 930 பேருக்கு உரிமம் அளிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளது. சென்னையில் ஏற்கெனவே, மாநகராட்சி சார்பில் புளியந்தோப்பு, லாயிட்ஸ் காலனி, கண்ணம்மாப்பேட்டை ஆகிய இடங்களில் நாய்கள் உள்ளிட்ட விலங்குகளுக்கான இனக்கட்டுப்பாடு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு ஆண்டுக்கு சுமார் 16 ஆயிரம் நாய்களுக்கு மட்டுமேகருத்தடை அறுவை சிகிச்சைகளை செய்ய முடியும். நாய்களால் ஏற்படும் தொந்தரவை குறைக்கவும், அவற்றின் இனப்பெருக்கத்தை தடுக்கவும், நாய்கள் தொடர்பாக வரும் அதிக அளவிலான புகார்களை எதிர்கொள்ளவும் தற்போதுள்ள வசதிகள் போதுமானதாக இல்லை.

இந்நிலையில் மேற்கூறிய பகுதியில் புதிதாக விலங்கு இனக் கட்டுப்பாட்டு மையங்களை உலகத் தரத்தில் ₹20 கோடியில் அமைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. அதன்படி, மேற்கூறிய 3 இடங்களில் உலகத்தரத்தில் விலங்கு இனக் கட்டுப்பாடு மையங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அப்பணிகளை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் ேநரில் ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்க உத்தவிட்டார்.இதுதொடர்பாக மாநகர தலைமை கால்நடை மருத்துவ அதிகாரி கமால் உசேன் கூறுகையில், ‘‘இத்திட்டம் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இம்மையங்கள் பயன்பாட்டுக்கு வரும்போது, ஆண்டுக்கு 27 ஆயிரம் நாய்களுக்கு இனக் கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை செய்ய முடியும். வெறிநாய்க்கடி தடுப்பூசி போடும் பணிகளும் மேற்கொள்ள முடியும். இம்மையங்களில் புதிதாக ஆய்வகம், எக்ஸ்ரே, ஸ்கேன் மையங்கள், செல்லப்பிராணிகள் சிகிச்சை மையம் ஆகியவை இடம்பெற உள்ளன. துரு பிடிக்காத உலோகத்தாலான 460 கூண்டுகளும் அங்கு அமைக்கப்பட உள்ளன. இந்த 3 மையங்களும் வரும் ஜூலை மாத இறுதியில் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது,’’ என்றார்.

The post சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் 3 இடங்களில் ₹20 கோடி மதிப்பீட்டில் விலங்கு இனக்கட்டுப்பாடு மையங்கள்: ஜூலையில் பயன்பாட்டுக்கு வருகிறது appeared first on Dinakaran.

Tags : Breeding ,Chennai ,Chennai… ,Singara ,Dinakaran ,
× RELATED இனப்பெருக்கத்தை தடுக்க நடவடிக்கை...