சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையின் முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவை முன்னாள் சபாநாயகரும், திமுக தேர்தல் பணிக்குழு தலைவருமான சேடப்பட்டி முத்தையா உடல்நலக்குறைவு காரணமாக மதுரையில் காலமானார். அவருக்கு வயது 76. உடல்நலக்குறைவு காரணமாக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் 3 மாடங்களாக தொடர் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். 1991 முதல் 1996 வரை அதிமுக அட்டகாய் காலத்தில் சட்டப்பேரவை தலைவராக சேடப்பட்டி முத்தையா பதவி வகித்தார்.
1977, 1980, 1984, 1991 ஆகிய 4 முறை சேடப்பட்டி தொகுதியில் இருந்து அதிமுக சட்டமன்ற உறுப்பினராக அவரை தேர்வு செய்யப்பட்டார். பெரியகுளம் மக்களவை தொகுதி உறுப்பினராக 2 முறை பதவி வகித்த அவர், 1999ல் வாஜ்பாய் தலைமையில் அமைந்த தேசிய ஜனநாயக கூட்டணி அமைச்சரவையில் ஒன்றிய தரைவழி போக்குவரத்து துறை அமைச்சராக பதவியும் வகித்தார். 2001ல் அதிமுகவில் இருந்து விலகிய அவர் 2006-ம் ஆண்டு திமுக-வில் இணைந்து, தேர்தல் பணிக்குழு தலைவராக பணியாற்றினார். இந்நிலையில் மதுரை திருமங்கலத்தில் வசித்து வந்த சேடப்பட்டி முத்தையாவிற்கு கடந்த சில வாரங்களாகவே உடல் குறைவு ஏற்பட்டதன் காரணமாக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரை வந்த முதல்வர் மு.க ஸ்டாலின் அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்ததுடன், அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்தும் மருத்துவரிடம் கேட்டறிந்தார். இந்நிலையில் சேடப்பட்டி முத்தையா இன்று உடல் நலக்குறைவினால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உயிரிழந்த சேடப்பட்டி முத்தையாவிற்கு சகுந்தலா என்ற மனைவியும் இரண்டு மகன் மற்றும் இரண்டு மகள்களும் உள்ளனர். இந்நிலையில் முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா மறைவுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சேடப்பட்டியார் என மதிப்புடன் அனைவராலும் அழைக்கப்படும் சேடப்பட்டி திரு. முத்தையா மறைவு அறிந்து மிகவும் துயருற்றேன். 4 முறை எம்.எல்.ஏ., 2 முறை எம்.பி.யாக இருந்த சேடப்பட்டி முத்தையா, தமிழ்நாடு சட்டப்பேரவையின் தலைவராக 1991 - 1996 ஆண்டுகளில் பணியாற்றியுள்ளார். 2006-ல் கலைஞர் முன்னிலையில் திமுகவில் இணைந்த சேடப்பட்டி முத்தையா, கட்சி வளர்ச்சிக்காக, மேன்மைக்காக தொடர்ந்து பங்காற்றி வந்தார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், கழக உடன்பிறப்புகளுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.