×

போந்தவாக்கம் ஊராட்சியில் சேதமடைந்துள்ள மின் கம்பங்கள் மாற்றி தர கோரிக்கை

ஊத்துக்கோட்டை: போந்தவாக்கம் ஊராட்சியில்  சேதமடைந்த நிலையில் 7 மின் கம்பங்கள் உள்ளன.  வரும் மழைக்காலத்திற்குள் பலமாக  காற்று வீசும்போது உடைந்த மின் கம்பத்திலிருந்து மின்சாரம் பாய்ந்து, விபரீதம் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அதற்கு முன்பாக மாற்றி தர வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஊத்துக்கோட்டை அருகே  பூண்டி ஒன்றியம் போந்தவாக்கம் ஊராட்சி உள்ளது. இங்கு அரசு, தனியார் கம்பெனி ஊழியர்கள், விவசாயிகள், மாணவ - மாணவிகள் என 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் இருப்பவர்கள்  வேலைக்கும், மாணவர்கள்  பள்ளி, கல்லூரிகளுக்கும் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வாங்கவும் இங்குள்ள சாலையின் வழியாகதான் செல்வது வழக்கம். இதில், இங்குள்ள புதிய காலனி பகுதியில்  சாலையின் ஓரங்களில்  உள்ள மின் கம்பங்களில் உள்ள சிமென்ட் சிலாப்புகள் உடைந்தும், எலும்பு கூடுகளாக  கம்பிகள் வெளியே தெரிந்தும்  காட்சியளிக்கிறது. வருவது, மழை காலம் என்பதால் பலமாக  காற்று வீசும்போது, மழை நேரத்தில் உடைந்த மின் கம்பத்திலிருந்து மின்சாரம் பாய்ந்து, விபரீதம் ஏற்படும் அபாயமும் உள்ளது. மேலும், இந்த கிராமங்களில் விவசாயிகள் அதிக அளவு உள்ளதால் அடிக்கடி, வயலுக்கு இந்த வழியாக தான் சென்று வருகின்றனர்.

காற்று வீசி இந்த மின் கம்பங்கள் உடைந்தால் விவசாயிகள் பாதிக்கப்படுவர். எனவே, உடைந்த மின் கம்பங்களை மாற்ற வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து கிராம மக்கள் கூறியதாவது, `கிராம மக்களாகிய நாங்கள் ஊத்துக்கோட்டை,  சீத்தஞ்சேரி  பகுதிக்கு சைக்கிளில்  சென்றுதான்  மற்ற இடங்களுக்கு செல்ல வேண்டும்.  எங்கள் பிள்ளைகள் கிராமத்தில் உள்ள  பள்ளிகளுக்கு நடந்தே செல்ல வேண்டி உள்ளது.  அந்த நேரத்தில்  காற்றடித்து, உடைந்த மின் கம்பத்திலிருந்து, அதன் கம்பிகள் கீழே விழுந்தால், உயிர் பலி ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும், புதிய காலனி பகுதியில் 6 மின் கம்பங்களும், கிராமத்தில் ஒரு கம்பம் என 7 கம்பங்கள் சேதமடைந்துள்ளன.சிமென்ட் சிலாப்புகள் உடைந்தும் உள்ளது. வருவது, மழை காலம் என்பதால்.  மழை நேரத்தில் உடைந்த மின் கம்பத்திலிருந்து மின்சாரம் பாய்ந்து, விபரீதம் ஏற்படவும் வாய்ப்புள்ளது. எனவே, இந்த மின்கம்பங்களை மாற்ற வேண்டும் என ஊத்துக்கோட்டை மின்வாரிய அலுவலகத்திலும்,  திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்திலும் ஊராட்சி சார்பில் மனு கொடுத்தோம்.  ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.  எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறினர்.


Tags : Ponthavakkam Panchayat , Request for replacement of damaged electric poles in Ponthavakkam Panchayat
× RELATED நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு...