×

பிரதமர் மோடி-ஷேக் ஹசீனா முன்னிலையில் இந்தியா-வங்கதேசம் இடையே 7 ஒப்பந்தங்கள் கையெழுத்து

புதுடெல்லி: இந்தியாவில் 4 நாள் சுற்றுப்பயணமாக வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா நேற்று முன்தினம் டெல்லி வந்தார். அவர் நேற்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இதற்காக, ஜனாதிபதி மாளிகைக்கு வந்த ஹசீனாவுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரை, பிரதமர் மோடி வரவேற்றார். அங்கு அவருக்கு முப்படைகளின் மரியாதை அளிக்கப்பட்டது. ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்துக்கு சென்ற ஹசீனா மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதைத் தொடர்ந்து, பிரதமர் மோடி, ஷேக் ஹசீனா தலைமையில் இருதரப்பு பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது, தீவிரவாதத்துக்கு எதிராக கூட்டு நடவடிக்கை, வர்த்தகம், குஷியாரா நதி நீர் பங்கீடு உட்பட7 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

சந்திப்புக்கு பின் பிரதமர் மோடி கூறுகையில், ‘பயங்கரவாதம் மற்றும் அடிப்படைவாதத்திற்கு எதிரான கூட்டு ஒத்துழைப்பை இன்று நாங்கள் பேசினோம். 1971 ஆண்டின் உணர்வை உயிர்ப்புடன் வைத்திருக்க, நமது பரஸ்பர நம்பிக்கையைத் தாக்க விரும்பும் இத்தகைய சக்திகளை நாம் ஒன்றாக எதிர்கொள்வது மிகவும் அவசியம். இனி இந்தியா, வங்க தேசம் இடையேயான உறவு புதிய உச்சத்தை எட்டும்’ என்று தெரிவித்தார். வங்கதேச பிரதமர் ஹசீனா கூறுகையில், ‘நட்பு மற்றும் ஒத்துழைப்பின் உணர்வில் இரு நாடுகளும் பல பிரச்னைகளை தீர்த்துக்கொண்டதை நான் நினைவுகூர்கிறேன். டீஸ்டா நதிநீர் பங்கீடு ஒப்பந்தம் உட்பட நிலுவையில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் விரைவில் முடிவுக்கு வரும் என்று நாங்கள் நம்புகிறோம்’ என்று கூறினார். 


Tags : India ,Bangladesh ,Modi ,Sheikh Hasina , 7 agreements signed between India and Bangladesh in the presence of Prime Minister Modi-Sheikh Hasina
× RELATED I.N.D.I.A. கூட்டணிக்கு செலுத்தும் வாக்குகள் வீணாவது உறுதி : பிரதமர் மோடி