×

தாசில்தாரிடம் விண்ணப்பித்த மாணவனுக்கு 2 வாரத்தில் ஜாதி, மதம் இல்லாதவர் என சான்று தர வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: ஜாதி, மதம் அற்றவர் என்று சான்றிதழ் கோரி விண்ணப்பித்தவருக்கு 2 வாரங்களில் சான்றிதழ் வழங்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மேற்கு அண்ணாநகரை சேர்ந்த மனோஜ், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், எனக்கு கடந்த 2014ல் திருமணம் நடந்தது. காதல் திருமணம் குடும்பத்தினரின் சம்மதத்துடன் நடந்தது. நானும் மனைவியும் வேறு வேறு பிரிவை சார்ந்தவர்கள். இதையடுத்து, எனது மகன் யுவன் மனோஜூக்கு சாதி, மதம் அற்றவர் என்ற சான்றிதழை பெற முடிவு செய்தோம்.

எனது மகனை வரும் அக்டோபர் மாதம் பள்ளியில் சேர்க்க உள்ளேன். அவனுக்கு ஜாதி, மதம் அற்றவர் என்ற சான்றிதழ் கோரி அம்பத்தூர் தாசில்தாரிடம் 2021 ஜூன் மாதம் விண்ணப்பித்தேன். ஆனால், அம்பத்தூர் தாசில்தார் சான்றிதழ் வழங்கவில்லை. இதையடுத்து, தாசில்தாரிடம் கேட்டதற்கு ஜாதி, மதம் அற்றவர் என்று சான்றிதழ் தருவது குறித்து தெரியவில்லை என்று பதிலளித்தார். எனவே, எனது மகனுக்கு ஜாதி, மதம் அற்றவர் என்ற சான்றிதழ் வழங்குமாறு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சான்றிதழ் வழங்க ஒப்புக்கொண்டதாக தாசில்தார் அளித்த கடிதத்தை அரசு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி அப்துல் குத்தூஸ், இரண்டு வாரங்களில் மனுதாரரின் மகனுக்கு சான்றிதழ் வழங்குமாறு அம்பத்தூர் தாசில்தாருக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

Tags : Tahsildar , Application to Tahsildar, proof of non-caste, religion, iCourt order
× RELATED நச்சுக்காற்றால் பொதுமக்கள் பாதிப்பு;...