லிஃப்ட்டுன்னா பயம்

நன்றி குங்குமம் டாக்டர்

70 வயது முதியவர் ஒருவர் என்னிடம் வந்தார். அவர் விமானத்தில் செல்வதற்கும், லிஃப்டில் செல்வதற்கும் தனக்கு பயமாக இருப்பதாக சொன்னார். இதுவரை நான் எத்தனை மாடிகளாக இருந்தாலும் படிக்கட்டில் ஏறியே செல்வேன். விமானத்திலும் நான் சென்றதே இல்லை. எப்படியாவது இந்த பயத்தைப் போக்க வேண்டும். ஆன்மிக பயணமாக ஜெருசலேம் போக வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை. இந்த ஆசையை நிறைவேற்ற எனக்கு உதவி செய்யுங்கள் என்றார் அவர். அவருக்கு தேவையான பயிற்சிகளும், மருத்துவ சிகிச்சையும் கொடுத்த பிறகு, அவர் விமானத்தில் ஜெருசலேம் சென்றார். அங்கே சென்றுவந்த பிறகு அவருக்கு ஏற்பட்ட சந்தோஷத்தை என்னோடு பகிர்ந்துகொண்டு நன்றியும் தெரிவித்தார். அவருக்கு ஏற்பட்டிருந்த உளவியல் பிரச்னைக்கு Claustrophobia என்று பெயர். இந்த க்ளஸ்ட்ரோபோபியா எதனால் ஏற்படுகிறது? எந்தெந்த இடங்களில் எல்லாம் ஏற்படுகிறது?

வெளியிடங்களுக்கு செல்கிறபோது அங்கே திடீரென ஏற்படுகிற மக்கள் கூட்டம் அல்லது நெரிசலில் சிக்கிக் கொண்டு தனக்கு ஏதாவது பிரச்னை ஏற்பட்டு

விடுமோ என்று அதிகமாக பயப்படுவது, நெரிசலான லிஃப்ட் அல்லது ஜன்னல் இல்லாத பூட்டப்பட்ட அறைக்குள் செல்கிறபொழுது அங்கு மாட்டிக்கொண்டு தனக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்று அதிகமாக பயப்படுவது, MRI Scan எடுக்கும் அறை, பொதுக் கழிப்பறை, உடை மாற்றும் அறை போன்றவற்றுக்குள் செல்வதற்கு பயப்படுவது, விமானங்களில் பயணம் செய்வது, அதிக கூட்டம் உள்ள பேருந்து, ரயில் போன்ற வாகன பயணங்களின்போது ஏற்படுகிற நெரிசல்கள், நெரிசலான நெடுஞ்சாலையில் வாகனம் ஓட்டுவது போன்ற சூழலில் அந்த இடங்களில் மாட்டிக்கொண்டு தனக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்கிற எண்ணத்தால் ஏற்படுகிற அதிக அளவிலான பயத்தால் Claustrophobia பிரச்னை ஏற்படுகிறது.

க்ளஸ்ட்ரோபோபியா மனரீதியாக மட்டுமின்றி உடல்நலத்திலும் பிரச்னைகளையும் ஏற்படுத்தும். இந்தப் பிரச்னை இருப்பவர்கள் இதுபோன்ற அடைக்கப்பட்டுள்ள அல்லது நெரிசலான இடத்திற்குள் சென்றவுடன், திடீரென மூச்சடைப்பது போன்ற உணர்வு, இதயத் துடிப்பு வேகமாதல், உடலில் படபடப்பு ஏற்படுவது, உடல் முழுவதும் வியர்ப்பது, கை, கால் நடுக்கம், மயக்கம், தலைசுற்றல், நா வறட்சி, வயிற்றைப் புரட்டுவது போன்ற உணர்வு, வாந்தி, தலைவலி மற்றும் நெஞ்சுவலி போன்ற பிரச்னைகள் உண்டாகிறது. மேலும் குறிப்பாக இதுபோன்ற சூழல்களால் மனப்பதற்றம் அதிகரித்து ஒருவித அதீதமான பயம் ஏற்படுகிறது. அந்த இடத்தையோ அல்லது அந்த சூழலையோ கடந்து செல்கிற வரையில் இவர்களுக்கு இந்த பயம் அதிகரித்த வண்ணமே இருக்கிறது. இந்த பயத்தால் அதிகபட்சமாக மயக்கமடைந்து விழுகிற நிலை ஏற்படுகிறது.

இப்பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ள நபர் அடைக்கப்பட்டுள்ள அல்லது மூடப்பட்டுள்ள இடங்களுக்குள் செல்வதற்கு ஏன் பயப்படுகிறார்? அதற்கான காரணங்கள் என்னென்ன? என்பதை அறிந்து கொண்டு, அந்த பயத்தைப் போக்க தேவையான பயிற்சிகள் அளிப்பதோடு, தேவையான ஆலோசனைகள் கொடுத்து, மனதளவில் புரிந்துகொண்டு அவர்களை செயல்படத் தூண்டுகிறோம். இந்தப் பிரச்னையால் பாதிக்கப்பட்ட நபர்கள் அதற்கு காரணமான இடங்களுக்கு செல்வதையே தவிர்ப்பார்கள். லிஃப்ட்டில் செல்ல மாட்டார்கள், தியேட்டர்களுக்கு செல்ல மாட்டார்கள், விமான பயணத்தைத் தவிர்ப்பார்கள், கூட்டமாக வரும் பேருந்துகளில் ஏறமாட்டார்கள். இந்த நபர்களுக்கு ஏற்படுகிற பய உணர்வினால்தான் நெஞ்சு படபடத்தல், வியர்த்து கொட்டுதல், மூச்சு வாங்குதல் போன்ற அறிகுறிகள் வெளிப்படுகிறது. இந்த அறிகுறிகளைப் போக்கி அவர்களுடைய பயத்தைப் போக்குவதற்கு ரிலாக்சேஷன் பயிற்சிகள் கொடுக்கப்படுகிறது.

இப்பிரச்னை உள்ளவர்கள் லிஃப்ட் வசதி இருந்தாலும்கூட மாடிப்படிகளிலேயே ஏறிச் செல்வார்கள். இந்த நபர்களுக்கு முதலில் வெளியே இருப்பது தெரிவது போன்ற லிஃப்ட்களில் யாராவது ஒரு நபருடன் ஏறிச் செல்வது, ஒரு மாடி வரையில் மட்டும் செல்வது என்று கொஞ்சம் கொஞ்சமாக செல்வதற்கு பயிற்சி

கொடுப்போம். அதன் பிறகு கூடுதலான நபர்களுடன் செல்வது, வெளியே இருப்பது தெரியாதது போன்று அடைக்கப்பட்ட நிலையில் உள்ள லிஃப்ட்களில் செல்வது, கூடுதல் மாடிகள் செல்வது என்று படிப்படியாக பயிற்சி கொடுப்போம். இதுபோல் பயணம் செய்கிறபோது பயம் ஏற்பட்டால் அதைப் போக்குவதற்கான ரிலாக்சேஷன் பயிற்சிகளை செய்யும்படி அவர்களை பழக்கப்படுத்துவோம்.

இதுபோன்ற நபர்கள் இப்படி உளவியல்ரீதியாக கொஞ்சம் கொஞ்சமாக தன்னை சரிசெய்துகொண்டு அந்த இடங்களுக்கு செல்வதற்கான இந்த சிகிச்சைக்கு Exposure and Response Prevention(ERP) சிகிச்சை என்று பெயர். அதீத பயத்தால் ஏற்படுகிற உடல்நல பிரச்னைகளைப் போக்க, தேவைப்படும்போது சில மருந்து, மாத்திரைகள் மனநல மருத்துவரால் பரிந்துரைக்கப்படுகிறது. இதுபோன்ற பய உணர்வுகளுடன் இருக்கும் நபர்களை உடனிருப்பவர்கள், குடும்பத்தினர், உறவினர் மற்றும் நண்பர்கள் மனநல மருத்துவரிடம் அழைத்துச் சென்று அவர்களுக்குத் தேவையான மனநல சிகிச்சைகள் மற்றும் ஆலோசனைகள் சரியான நேரத்தில் கிடைக்க உதவ வேண்டும்.

தொகுப்பு: க.கதிரவன்

லிஃப்ட் பயத்தால் 28 மாடியும் ஏறி இறங்கினேன்...

கஜோலின் கணவரும் பிரபல இந்தி நடிகருமான அஜய் தேவ்கன் Claustrophobia பிரச்னையால், தான் பாதிக்கப்பட்டிருந்ததைப் பற்றி ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார். ‘Bhoot என்ற இந்திப்பட ஷூட்டிங்கின்போது, ஒருமுறை லிஃப்ட் கோளாறு ஆகி பாதியில் நின்றுவிட்டது. அதுவும் வேகமாக சென்று 4-வது மாடியில் பெரும் சப்தத்துடன் நின்றது. அந்த லிஃப்ட்டில் இருந்து வெளியேற முடியாமல் அரை மணி நேரத்துக்கும் மேலாகத் தவித்தேன். ஒருவழியாகத் தப்பித்து வந்த பிறகு, லிஃப்ட் என்றாலே அலர்ஜி ஆகிவிட்டது. Bhoot படத்தின் ஷூட்டிங் 28-வது மாடியில் நடந்தது. ஆனாலும், மாதக்கணக்கில் நான் படிகளிலேயே ஏறி இறங்கி படப்பிடிப்புக்குச் சென்று வந்தேன். அந்த பாதிப்பில் இருந்து மீண்டு வரவும் உளவியல் ஆலோசனைகள் தேவைப்பட்டது’ என்று கூறியிருக்கிறார்.

Related Stories:

>