×

டெல்லியில் பெண்களுக்கு எதிரான குற்றம் 17% அதிகரிப்பு; கடந்த 7 மாதங்களில் 1,100 பேர் பலாத்காரம்; 2,704 பேர் கடத்தல்

புதுடெல்லி: டெல்லியில் பெண்களுக்கு எதிரான குற்றம் 17% அதிகரித்துள்ளது. கடந்த  6 மாதங்களில் 1,100 பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர். 2,704 பெண்கள்  கடத்தப்பட்டுள்ளனர். இதனால், தலைநகரில் பெண்களின் பாதுகாப்பு  கேள்விக்குறியாகி உள்ளது. டெல்லியில் கடந்த  2012ம் ஆண்டு டிசம்பர் 16ம் தேதி மருத்துவ மாணவி நிர்பயா தன் நண்பருடன்  பேருந்தில் பயணித்துக்கொண்டிருந்தபோது 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல்  வன்கொடுமை செய்யப்பட்டு ஓடும் பேருந்திலிருந்து தூக்கி வீசப்பட்டார்.  மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  இதையடுத்து, பாதுகாப்பை உறுதிப்படுத்த ‘நிர்பயா நிதி’ என்ற பெயரில்  பெண்களின் பாதுகாப்பு திட்டத்துக்காக ஒன்றிய அரசு நிதி ஒதுக்கீடு செய்து  வருகிறது. இருப்பினும், பாலியல் பலாத்காரம் சம்பவங்கள் மட்டும்  குறைந்தபாடில்லை.

குறிப்பாக, டெல்லியில் பாலியல் பலாத்காரம் தொடர்பான  வழக்குகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த மே 18ம்  தேதி கூட 13 வயது சிறுமி ஒருவர், 8 பேரால் கூட்டு பாலியல் பலாத்காரம்  செய்யப்பட்டார். இதேபோன்ற பல சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இந்நிலையில்,  டெல்லியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்த புள்ளி விபரங்கள்  வெளியாகி உள்ளது. அதன்படி, நடப்பு ஆண்டில் ஜூலை 15ம் தேதி வரை 1,100  பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர். கடந்தாண்டு இதே  காலகட்டத்தில் 1,033 பெண்கள் பாலியல் பலாத்காரத்தால்  பாதிக்கப்பட்டிருந்தனர். கடந்தாண்டு புள்ளி விபரங்களுடன் ஒப்பிடுகையில்  இந்தாண்டு 6.48 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்தாண்டு பெண்கள் மீதான  தாக்குதல்கள் வழக்குகள் 1,244 என்ற அளவில் இருந்த நிலையில், நடப்பாண்டில்  இதுவரை 1,480 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. டெல்லியில் இந்தாண்டு  மட்டும் இதுவரை கிட்டத்தட்ட 2,197 பெண்கள் கடத்தப்பட்டுள்ளனர். ஆனால் கடந்த  ஆண்டு முதல் ஆறு மாதங்களில் 1,880 கடத்தல்களை விட இது அதிகமாகும்.

கடந்தாண்டு  முழுவதும், 3,758 பெண்கள் கடத்தப்பட்டனர். பின்னர் அவர்களில் பலர்  மீட்கப்பட்டனர். இந்த ஆண்டு புள்ளி விவரங்களின்படி கிட்டத்தட்ட 30 சதவீதம்  அளவிற்கு பெண்கள் கடத்தல் புகார்கள் அதிகரித்துள்ளன. இந்தாண்டு மட்டும்  குடும்ப வன்முறைக்கு 2,704 பெண்கள் ஆளாகி உள்ளனர். கடந்த ஆண்டு 2,096  பெண்கள் பாதிக்கப்பட்டிருந்தனர். வரதட்ணை கொடுமை தொடர்பாக கடந்தாண்டு 72  பேரும், இந்த ஆண்டு 69 பெண்களும் பாதிக்கப்பட்டனர். கடந்தாண்டு முதல் ஆறு  மாதங்களில் (ஜூன் வரை) பெண்களுக்கு எதிரான மொத்த குற்றங்களின் எண்ணிக்கை  6,747 ஆக இருந்தது. அதே நடப்பாண்டு 7,887 ஆக அதிகரித்துள்ளது. ஒட்டு  மொத்தமாக தேசிய தலைநகரில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 17 சதவீதம்  அதிகரித்துள்ளது.

Tags : Delhi , 17% increase in crime against women in Delhi; 1,100 rapes in last 7 months; 2,704 kidnappings
× RELATED அமலாக்கத்துறை சட்டத்துக்கு மேலான...