×

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் புளியோதரை சாதம், சாம்பார் சாதம் ரூ.110க்கு விற்பதால் மக்கள் அதிர்ச்சி: அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

அண்ணாநகர்: சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கு விரைவு பஸ்களும் சென்னை உள்பட பல பகுதிகளுக்கு உள்ளூர் பஸ்களும் இயக்கப்பட்டு வருகிறது. இங்கு தினமும் இரண்டு லட்சத்துக்கு மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனர். பயணிகள் வசதிக்காக பஸ் நிலைய வளாகத்தில் ஏராளமான ஓட்டல்கள், டீக்கடைகள் மற்றும் புத்தக கடைகள் உள்ளது. ஆனால் இங்குள்ள கடைகளில் அனைத்து பொருட்களும் பல மடங்கு விலை உயர்த்தி விற்பனை செய்யப்படுவதாக பயணிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். இதுசம்பந்தமாக உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து பயணிகள் கூறும்போது, ஏழை, எளிய மக்கள் மட்டுமே வந்து செல்லும் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் எல்லாமே விலை அதிகமாக விற்கின்றனர். குறிப்பாக ஓட்டல்களில் உணவுகளின் விலையை கேட்டாலே அதிர்ச்சி அளிக்கிறது. பஸ் நிலையத்தில் 4 வது பிளாட்பாரத்தில் உள்ள ஒரு தோசை கபேயில் புளியோதரை 110 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இங்கு சாப்பிட சென்றால், முதலில் பில் வாங்க வேண்டும். பணம் கட்டிய பிறகு பில் கொடுத்தால்தான் சாப்பாடு வழங்கப்படுகிறது. இவ்வாறு ஒருவர் பில் போடும்போது புளியோதரை 110 ரூபாய் என்றதும் அதிர்ச்சியில் உறைந்து விட்டார்.

இதுபோல் சாம்பார் சாதமும் 110 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு காபியின் விலை 22 ரூபாய். பில் கவுண்டரில் இருந்தவரிடம் ஏன் இவ்வளவு விலைக்கு விற்கிறீர்கள். உட்கார்ந்து சாப்பிடுவதற்கு கூட வசதியா கிடையாது என்று வாடிக்கையாளர்கள் கேட்டதற்கு, கடை ஊழியர் இந்த பஸ் ஸ்டேண்டுல எல்லாம் இவ்வளவு விலை தான், காசு இருந்தா சாப்பிடு இல்லனா கிளம்பு என்று திமிராக பேசுகிறார்.ஏழை முதல் பணக்காரர்கள் வரை வந்து செல்லும் கோயம்பேடு பஸ் நிலையத்தில் உள்ள ஓட்டல்களில் நடக்கும் கொள்ளையை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தவேண்டும். ஒவ்வொரு உணவு பொருட்களும் விலை நிர்ணயம் செய்து அதன் அடிப்படையில் மக்களுக்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவற்றை உடனடியாக செய்வார்களா?

Tags : Pleyodarai Chatham ,Sambar Sadam ,Coimbadu , Puliyodharai rice and sambar rice are sold at Rs.110 at Koyambedu bus station and people are shocked: Will the authorities take action?
× RELATED கோயம்பேடு மார்க்கெட்டில் சுற்றி...