
அண்ணாநகர்: கோயம்பேடு மார்க்கெட்டில், சுற்றி திரியும் மாடுகளால் பொதுமக்கள், வியாபாரிகள் பீதி அடைந்துள்ளனர். இதுகுறித்து, மாநகராட்சி ஆணையர் மார்க்கெட்டில் ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டுமென வியாபாரிகள் கோருகின்றனர். கோயம்பேடு காய்கறி, பழ மார்க்கெட்டில் உள்ள கடைகளில் விற்பனையாகாமல் வீணாகும் காய்கறி, பழங்களை கொட்டி வைக்கின்றனர். இவற்றை சாப்பிடுவதற்காக கோயம்பேடு மற்றும் நெற்குன்றம், மதுரவாயல் ஆகிய பகுதியில் இருந்து தினமும் சுமார் 150க்கும் மேற்பட்ட மாடுகள் வருகின்றன. இவ்வாறு வருகின்ற மாடுகள் திடீரென்று ஒன்றோடொன்று சண்டை போட்டுக்கொண்டு ஓடுகின்றன.
இதனால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பயப்படுகின்றனர். மாடுகள் வேகமாக ஓடும்போது விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள காய்கறிகளை நாசம் செய்கின்றன. இப்படி மார்க்கெட்டில் சுற்றிவரும் மாடுகளால் தொல்லையாக உள்ளதென வியாபாரிகள் அங்காடி நிர்வாக அலுவலகத்தில் புகார் அளித்தனர், அதன்பேரில் அங்காடி நிர்வாகம் சார்பில் மாடுகளைப் பிடித்து அதன் உரிமையாளர்களை வரவைத்து அபராதம் விதித்தனர். பின்னர், இனி மார்க்கெட்டில் மாடுகளை விட்டால் மாடுகள் ஏலம் விடப்படும்,’’ என்று அங்காடி நிர்வாகத்தினர் எச்சரித்தனர். ஆனால் இதனை மீறி மறுபடியும் கோயம்பேடு மார்க்கெட்டில் மாடுகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளது.
மாடுகளைப் பிடிக்க சென்னை மாநகராட்சி அதிகாரிகளிடம் வியாபாரிகள் புகார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வியாபாரிகள் கூறும்போது, ‘‘ கோயம்பேடு மார்க்கெட்டில் பயமுறுத்தும் வகையில் சுற்றி வரும் மாடுகளால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். மார்க்கெட்டில் மாடுகளால் ஆபத்து ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. சென்னை மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் கூறியுள்ளோம். ஆனால் இதுவரை மாடுகளை பிடிப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் மார்க்கெட்டில் ஆய்வு செய்து, மார்க்கெட்டில் மாடுகள் வராதபடி நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என கோரினர்.
The post கோயம்பேடு மார்க்கெட்டில் சுற்றி திரியும் மாடுகளால் பொதுமக்கள், வியாபாரிகள் பீதி appeared first on Dinakaran.